ஹைதராபாத் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 33வது போட்டி, மும்பையில் உள்ள வாண்கடே சர்வதேச மைதானத்தில் இன்று (17.04.2025) இரவு நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் ஹைதரபாத் அணி முதலில் களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பு 162 ரன்களை குவித்தது. ஹைதரபாத் அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். அதே போன்று ஹேய்ன்ரிச் க்ளாசேன் 28 பந்துகளில் 37 ரன்களை குவித்தார். மேலும் டிராவிஸ் ஹெட் 29 பந்துகளில் 28 ரன்களையும் குவித்தார். எனவே மும்பை அணி வெற்றி பெற 163 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்தது. இதன் மூலம் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஒரு அளவு எளிய இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது.
இருப்பினும் மும்பை அணி 18 ஓவர்கள் ஒரு பந்தில் 6 விக்கெட் இழப்பு 166 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் ஹைதராபாத் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 26 பந்துகளில் 36 ரன்களை குவித்தார். ரியான் ரிக்கல்டன் 23 பந்துகளில் 11 ரன்களை குவித்தார். மேலும் சூர்யகுமார் யாதவ் 15 பந்துகளில் 26 ரன்களையும் குவித்தார். மேலும் தனது சிறப்பான ஆட்டத்திற்காக இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மும்பை அணியைச் சேர்ந்த வீரர் வில் ஜாக்ஸ் வென்றார்.
இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 3 போட்டிகளில் வெற்றியையும், 4இல் தோல்வியையும் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அதே சமயம் ஹைதரபாத் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியையும், 5இல் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.