ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கிறோம் – நலிந்த ஜயதிஸ்ஸ

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகளை வெளிப்படுத்தும் பொறுப்பை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் நீதிமன்றத்திடமும் ஒப்படைக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி கூறிய கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“விசாரணைகள் சரியாக நடைபெற்று வருகின்றன. அதற்கு சரியான திகதிகளைக் கூற முடியாது. நாங்கள் மக்களின் ஆணையின்படியே பணியாற்றுகிறோம். இந்த சதித்திட்டத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களின் பதற்றத்திற்கு அரசாங்கம் பதற்றமடையாது. கம்மன்பில போன்ற பதற்றங்கள் இன்னும் நிறைய வரும். ஆனால் அந்த பதற்றங்களை அரசாங்கம் பொருட்படுத்தாது. விசாரணைகள் சரியாக நடக்கின்றன.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை மிகவும் சிக்கலான பணி. அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன” என்றும் அவர் மேலும் கூறினார்.