புத்தாண்டு பிரச்சனையே டானின் கொலைக்கு காரணம் – முக்கிய குற்றவாளி துலானின் அதிர்ச்சி வாக்குமூலம்!

டான் பிரியசாத் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான துலான் மதுசங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இந்த கொலையை திட்டமிட்டும், மேற்கொண்டும் இருந்ததை பொலிஸில் ஒப்புக்கொண்டுள்ளார். கொலையின் பின்னணியாக, அண்மையில் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட தகராறும், பாதாள உலக ஒத்துழைப்பும் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலுக்கான அடிப்படை, வெல்லம்பிட்டி பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் தொடங்கியதாக தெரியவந்துள்ளது. அங்கு, டானின் சகோதரனை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் தந்தை–மகன் இருவரும் டானை சந்தித்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக, டான் கடந்த 20ம் திகதி அந்த தரப்பினருக்குச் சொந்தமான முச்சக்கரவண்டியை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அன்றைய தினம் அவரை ஆஜராகுமாறு கேட்டும், டான் பொலிஸில் ஆஜராகாமல் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, துலான் முக்கியத்துவமாகி , இந்த கொலையை திட்டமிட்டுள்ளார். 22ம் திகதி, டான் தனது மனைவியின் வீட்டில் இருந்தபோது, அங்குச்சென்று சுட்டுக் கொலை செய்ததாக துலான் தெரிவித்துள்ளார்.
துலான், இந்த கொலைக்கான ஆலோசனையை தற்போது டுபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான கொலன்னாவை தனுஷ்கவிடம் தொலைபேசியில் பெற்றதாகவும், கஞ்சிபானி இம்ரானும் அந்த கலந்துரையாடலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், டானின் மனைவியின் தங்கை அவரிடம் தொடர்புடைய தகவல்களை துலானுக்கு வழங்கியதாகவும், இதனையடுத்து மொத்தம் ஏழு பேர் , இரு பெண்கள் உட்பட பொலிஸ் காவலில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், டானின் சகோதரனை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் தந்தை மற்றும் மகன் இருவரும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை கைது செய்யும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.