88-89 கொலை அலை மீண்டும் ஆரம்பித்துவிட்டது.. எங்கள் வேட்பாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்…

88, 89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை கண்ணால் காணாத இளைஞர் யுவதிகள் தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் கொலை அலையின் மூலம் அந்த பயங்கரவாத காலத்தைப் பற்றி ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது நாட்டில் கொலை அலை ஒன்று செயற்பட்டு வருவதாகவும், வீட்டுக்கு வந்து பிள்ளைகள் முன்னிலையில் தந்தையைக் கொலை செய்யும் கலாச்சாரம் மீண்டும் உருவாகியுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பின்வருமாறு கூறினார்.
தற்போது எனது கட்சியின் வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொரு வேட்பாளர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அவர்களுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இப்படி மக்களைக் கொலை செய்ய யாருக்கு உரிமை இருக்கிறது? இந்த குற்றங்களை யாரோ ஒருவரின் மீது சுமத்தி அரசாங்கம் கைகழுவ முயற்சிக்கிறது.
அன்று தலதா மாளிகைக்கு வழிபடச் சென்றபோது எங்களை பார்த்து சிரித்தவர்கள் இன்று தலதா மாளிகையை வழிபடுவது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தில் மிக நல்ல இளைஞர்கள் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக மக்கள் விடுதலை முன்னணி அந்த இளம் அரசியல்வாதிகளை பொய் சொல்லவும் சேறு பூசவும் பயன்படுத்துகிறது. அவர்களுக்கு உண்மையான யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள விடாமல், கட்சியின் தேவைக்காக சிலருக்கு மட்டும் தங்கள் அரசியல் பாத்திரத்தை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை முழுமையாக அழிக்கிறார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். இன்றும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை மேலும் குறைப்பது தொடர்பில் கடிதம் வருகிறது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பைக் குறைக்கிறார்கள் என்று சொன்னாலும், இப்போது நாட்டின் பொதுமக்களின் பாதுகாப்பும் குறைந்துள்ளது. தினமும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் அரசாங்கம் நீதியை நிலைநாட்டவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இந்த அரசாங்கத்திற்குள்ளிருந்தே மூடி மறைக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தபோது இருந்த அதிகாரிகள் இப்போது இந்த அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். அனுமானங்களின் அடிப்படையில் நபர்களை கைது செய்து அவர்களை குற்றவாளிகளாக்க முயற்சிக்கிறார்கள். இன்று அரசாங்கம் பொலிஸையும் சி.ஐ.டி.யையும் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயரைப் பாதுகாக்க பயன்படுத்துகிறது. கடந்த காலத்தில் சிறைச்சாலை ஆணையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதனுடன் தொடர்புடைய அந்த சகோதரியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.