போப் ஆண்டவர் மறைவு: இலங்கையில் தேசிய துக்க தினம் அறிவிப்பு!

புனித பிரான்சிஸ் போப் ஆண்டவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் 2025 ஏப்ரல் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று, புனித பிரான்சிஸ் போப் ஆண்டவர் மறைவு குறித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
தூதரகத்திற்கு வந்த ஜனாதிபதியை இலங்கையின் வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதர் பேராயர் பிரையன் உடைகுவே (Archbishop Brian N. Udaigwe) வரவேற்றார்.
பின்னர், அவருடன் சிறிது நேரம் உரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் குறிப்பு ஒன்றை எழுதி, புனித பிரான்சிஸ் போப் ஆண்டவர் மறைவு குறித்து உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவித்தார்.