டான் பிரியசாத் கொலை: மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன!

டான் பிரியசாத் கொலைச் சம்பவத்தை திட்டமிட்டதாக கூறப்படும் சந்தேகநபர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
டான் பிரியசாத்துடன் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பாதாள உலக குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் கூலிப்படையினரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
டான் பிரியசாத் கடந்த 22 ஆம் திகதி சாலமுல்ல வீட்டுத்தொகுதியில் உள்ள வீடொன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டான் பிரியசாத் அங்கு உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பில் டான் பிரியசாத்தின் மனைவியின் இளைய சகோதரியின் கணவர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு டான் பிரியசாத்தின் சகோதரனை வெட்டிக் கொலை செய்த வழக்கின் பிரதான சந்தேகநபர்கள் இருவராவர். அதன்படி அவர்களுக்கு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடையும் விதித்திருந்தது. தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்ய பொலிஸாரால் இதுவரை முடியவில்லை.
இவ்வாறான பின்னணியில், கொலையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் துலான் மதுசங்க எனும் ‘துலா’ என்பவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் வெள்ளம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று (24) கைது செய்யப்பட்டார்.
அவர் சந்தேகநபர்களான தந்தை மற்றும் மகனின் நெருங்கிய உறவினர் ஆவார். டானின் சகோதரனை கொலை செய்த சம்பவம் தொடர்பிலும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நான்கு நாட்களுக்கு முன்பு தனது முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது டான் அதனை நிறுத்தி தன்னையும் மற்றுமொருவரையும் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
பின்னர் இது குறித்து தான் கொலன்னாவை தனுஷ்க என்பவருக்கு தெரிவித்தபோது, அவர் “கொஞ்சம் பொறு, நான் கஞ்சிபானி இம்ரானை தொடர்புபடுத்தி தருகிறேன்” என்று கூறி கைபேசி செயலி மூலம் கஞ்சிபானி இம்ரானை தொடர்புபடுத்திக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அங்கு கஞ்சிபானி இம்ரான் “வெள்ளம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்று நீ புகார் கொடு. அவன் பொலிஸ் நிலையத்திற்கு வரும்போது அவனை தாக்குவோம்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
அந்த அறிவுரையின்படி வெள்ளம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
அதன்பின்னர், புகாரை விசாரிப்பதற்காக டான் பிரியசாத் கடந்த 22 ஆம் திகதி அதாவது கொலை நடந்த தினத்தன்று வெள்ளம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டபோதும் அவர் அங்கு செல்லாததால் கொலை முயற்சி தோல்வியடைந்தது.
அதன்பின்னர் கஞ்சிபானி இம்ரான் மீண்டும் தனக்கு தொலைபேசியில் அழைத்து “அவனை தாக்க ஒருத்தன் போதாது. நீ வா. அவன் சாயங்காலம் வருவான்” என்று கூறியுள்ளார்.
அதன்பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து சந்தேகநபர் இதுவரை சரியாக கூறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
கஞ்சிபானி இம்ரானை நாட்டிற்கு அழைத்து வர எதிர்ப்பு இயக்கமொன்றை ஏற்பாடு செய்தமை மற்றும் அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை காரணமாக கஞ்சிபானி, டான் பிரியசாத்துடன் பகைமையில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் கூலிப்படையினரை கொலைக்காக வழங்கியிருக்கலாம் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
டான் பிரியசாத் அன்று மாலை தனது மனைவியின் பெரிய வீட்டிற்கு வந்து மது விருந்து நடத்திக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார்.
அதன்படி பொலிஸார் சம்பந்தப்பட்ட வீட்டில் வசிக்கும் பெண்ணான டான் பிரியசாத்தின் மனைவியின் சகோதரியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அங்கு அவர், தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஒன்றை அன்று டான் பிரியசாத் தலையிட்டு விற்றுக்கொடுத்ததன் காரணமாக தனது வீட்டில் மது விருந்து வைத்ததாக கூறியுள்ளார்.
கொலை செய்யப்படுவதற்கு சுமார் 3 மணி நேரத்திற்கு முன்பு அங்கு வந்த டான், குடும்பத்தினருடன் வருவதாக கூறிவிட்டு சென்றதாகவும், பின்னர் இரவில் மீண்டும் வந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
டான் பிரியசாத்தின் உடல் நேற்று முன்தினம் (24) பொரளை தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.