காஷ்மீர் தாக்குதலின் பின் மோடியை தொலைபேசி அழைத்த அனுர குமார ; இலங்கை , இந்தியாவுக்கு துணை நிற்கும் என உறுதி!

ஜம்மு காஷ்மீரின் பாஹல்காமில் சமீபத்தில் 26 பேரின் உயிர்களை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இரு நாட்டு தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து அறிந்ததும் தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கூறினார். இலங்கை எப்போதும் இந்திய மக்களுடன் சகோதரத்துவத்துடன் இணைந்து நிற்கும் என்றும் அவர் கூறினார்.
உலகில் எங்கு நடந்தாலும் பயங்கரவாதத்தை கடுமையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கத்தின் மற்றும் மக்களின் இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தார்.
தற்போது உருவாகியுள்ள சூழ்நிலை காரணமாக அதிகரித்துள்ள பதற்றமான சூழல் விரைவில் தணிந்து பிராந்திய அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.