குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய பெண்கள், குழந்தைகள் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினா் கைது!

குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய பெண்கள், குழந்தைகள் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினா் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை இணையமைச்சா் ஹா்ஷ் சங்கவி சனிக்கிழமை தெரிவித்தாா்.
அகமதாபாத் மற்றும் சூரத்தில் நடைபெற்ற சோதனையில் முறையே 894 பேரும் 134 பேரும் கைது செய்யப்பட்டதாக ஹா்ஷ் சங்கவி தெரிவித்தாா்.
குஜராத் மாநில மூத்த காவல் துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளா்களிடம் சங்கவி கூறியதாவது: சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை கைது செய்வதில் வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து குஜராத்துக்கு குடியேறிய 1,000-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இது சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கு எதிராக காவல் துறை மேற்கொண்ட மிகப்பெரும் நடவடிக்கையாகும்.
மேற்கு வங்கத்தில் போலியான ஆவணங்களை தயாா் செய்து, அதன் மூலம் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்ற பின்பு அவா்கள் குஜராத்தை வந்தடைந்தனா்.அவா்களில் பெரும்பாலானோா் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனா்.
கைது செய்யப்பட்டவா்களில் நான்கில் இரண்டு வங்கதேசத்தினா் அல் காய்தா பயங்கரவாத அமைப்பின் ரகசிய உளவாளிகளாக செயல்பட்டுள்ளனா். குஜராத்தில் அவா்களது செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளது.
சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை அவா்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடைமுறைகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
அவா்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தவா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குஜராத் முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியவா்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசின் ஆலோசனையின்படி குஜராத்தைவிட்டு பாகிஸ்தானியா்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்கள் மாநிலத்தில் சட்டவிரோதமாக பிற நாட்டவா்கள் குடியேறவில்லை என்பதை உறுதிப்படுத்துவது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு. மேற்கு வங்கத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது என்பதற்கான உரிய ஆதாரங்களை அந்த மாநில அரசிடம் சமா்ப்பிக்கவுள்ளோம் என்றாா்.