தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு! இனி கால அவகாசம் வழங்கப்படமாட்டாது!! – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு.

“உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகின்றது. இதுவரையான காலப்பகுதியில் வாக்களிக்காத அரச உத்தியோகத்தர்கள் இன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும். தபால் மூல வாக்களிப்புக்கு இனி கால அவகாசம் வழங்கப்படமாட்டாது.”
இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழு தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு நான்கு நாட்கள் ஒதுக்கப்பட்டன.
இதற்கமைய கடந்த வியாழக்கிழமை (24), வெள்ளிக்கிழமை (25) ஆகிய தினங்களில் முதற்கட்டமாகத் தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றது. அதேபோல் நேற்று (28) திங்கட்கிழமை மூன்றாவது நாளாக வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இறுதியாக இன்று (29) செவ்வாய்க்கிழமை தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கு ஒதுக்கப்பட்ட நான்கு நாட்கள் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தவறாமல் இன்று வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களிப்புக்கான கால அவகாசம் இனி வழங்கப்படமாட்டாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சசி சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவடைகின்றது. இதுவரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் தமது வதிவிடப் பகுதியில் உள்ள தபால் நிலையத்துக்குச் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் தமது வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.