அநுர அரசாங்கமும் அரசியல் தலையீடு! – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு.

“அரசியல் தலையீடற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொண்ட அநுர அரசும் கடந்த கால ஆட்சியாளர்கள் போன்றே அரசியல் தலையீடுகளைச் செய்கின்றது.”
இவ்வாறு இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர் செ.சிவசுதன் இன்று ஊடக சந்திப்பை நடத்தி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து உழைப்பாளர் தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.
ஆசிரியர் மற்றும் அத்துறைசார் தரப்பினரது ஊதியம் அதிகரிப்பு, கல்வித்துறையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது, மக்களின் காணி நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த மே தினப் பேரணி மே முதலாம் திகதி முற்பகல் இடம்பெறவுள்ளது.
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த மே தினப் பேரணி யாழ். நகரின் பிரதான சாலைகளூடாகப் பேரணியாகச் சென்று யாழ். பொது நூலகம் முன்பாக ஒன்றுகூடி பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் பேரணியில் அனைத்து துறைசார் தரப்பினரும் ஆதரவை வழங்கி பேரணியை வலுப்படுத்துவது அவசியமாகும்.” – என்றார்.