இன்று சட்டத்தின் ஆட்சி இல்லை – எதிர்க்கட்சித் தலைவர் கடும் விசனம்.

“இன்று நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை. அதனைப் பேணுவதற்கான ஏற்பாடுகளும் இல்லை. பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கை சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு அநுர அரசிடம் தீர்வு இல்லை.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விருப்பு வாக்குகளைப் பதிவிடுவது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர், கடந்த இரண்டு தேர்தல்களிலும் அரசு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதனைத் தெளிவாக நடைமுறைப்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கொள்கைப் பிரகடனத்தில் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமானது.

அரசியலில் பிரகடனப்படுத்தப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதும் என இரு அம்சங்கள் காணப்படுகின்றன. பிரகடனப்படுத்தப்படுவதற்கும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையில் இடைவெளியை விட்டுவிடாமல் சொன்னதை செய்வது சிறந்த அரசொன்றின் குறிகாட்டியாகும். கடந்த இரண்டு தேர்தல்களிலும் சுபீட்சமான நாட்டையும் அழகிய வாழ்க்கையையும் நாட்டு மக்களுக்கு பெற்றுத் தருவோம் எனக் கூறிய தரப்பினரின் வாக்குறுதிகளை நம்பி சுப நேரத்தில் அநுரவிடம் நாட்டை மக்கள் ஒப்படைத்தனர். ஆனால், அரசு வாக்குறுதியளித்த எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரிசி, பால் மா, தேங்காய் ஆகியவற்றின் விலைகளைக் குறைப்பதாக உறுதியளித்த போதும், பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளைக் கூட வழங்க முடியாத அரசு இன்று ஆட்சியில் இருந்து கொண்டிருக்கின்றது. தாம் முன்வைக்கும் முதலாவது வரவு – செலவுத் திட்டத்திலயே 35 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவோம் என இந்த அரசு உறுதியளித்த போதிலும், அந்த வாக்குறுதியும் இன்று மீறப்பட்டுள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.