ஐதராபாத் அணி தோற்றால் கல்கத்தாவுக்கு பிளே-ஆப் வாய்ப்பு.
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும்.
9 வெற்றிகளுடன் கம்பீரமாக முதலிட அரியணையில் அமர்ந்திருக்கும் மும்பை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இந்த ஆட்டத்தின் முடிவு அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கப்டன் ரோகித் சர்மா காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பில் இருந்து மீளாததால் இந்த ஆட்டத்திலும் கீரன் பொல்லார்ட்டே கப்டனாக செயல்படுவார். சம்பிரதாய மோதல் என்றாலும் உத்வேகத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் உள்ளனர்.
அதே சமயம் 6 வெற்றி, 7 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் உள்ள ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் வென்றால் ஓட்ட வீதத்தில் (+0.555) வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும். சறுக்கினால் வெளியேற வேண்டியது தான். ஐதராபாத் அணி தோற்றால் தான் கல்கத்தாவுக்கு பிளே-ஆப் வாய்ப்பு கிட்டும் என்பதால் மும்பையின் வெற்றிக்காக கல்கத்தா ரசிகர்கள் பிரார்த்திப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஐதராபாத் அணியில் கப்டன் டேவிட் வோர்னர், விருத்திமான் சஹா, வில்லியம்சன், மனிஷ் பாண்டே பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் சுழலில் ரஷித்கானும் (18 விக்கெட்), வேகத்தில் டி.நடராஜன் (14 விக்கெட்), சந்தீப் ஷர்மா, ஜோசன் ஹோல்டரும் மிரட்டுவார்கள். தவறுக்கு இடமின்றி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மும்பையின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தலாம். முந்தைய ஆட்டத்தில் இதே சார்ஜா மைதானத்தில் பெங்களூருவை 120 ரன்னில் சுருட்டியதால் ஐதராபாத் வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். பிற்பகுதியில் பனிப்பொழிவின் தாக்கம் காணப்படுவதால் நாணய சுழற்சியில் வெற்றி பெறும் அணி 2-வது துடுப்பாட்டத்தை செய்ய விரும்பும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.