நாடாளுமன்றச் செய்தியாளர்களில் இதுவரை ஐவருக்குக் கொரோனா.
நாடாளுமன்றச் செய்தியாளர்களில்
இதுவரை ஐவருக்குக் கொரோனா!
பலர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு
அச்சத்தில் வீடுகளுக்கு ஓட்டம்
நாடாளுமன்றத்துக்குச் செய்தி சேகரிப்புக்காகச் சென்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மேலும் ஓர் ஊடகவியலாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்படி நாடாளுமன்றச் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
இறுதியாக அடையாளம் காணப்பட்ட ஊடகவியலாளர் தமிழ்க் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவராவார்.
ஆங்கிலப் பத்திரிகையைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் முதன்முதலாக கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவருக்குப் பின்னர் இரண்டு சிங்களப் பத்திரிகைகளைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களுக்கும், தமிழ்த் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்றக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் 20ஆம், 21ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசமைப்பின் 20ஆவது திருத்தம் மீதான விவாதம், வாக்கெடுப்புகளைச் செய்தியாக அறிக்கையிடச் சென்றவர்கள்.
அன்றைய தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும்கூட நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாடாளுமன்றச் செய்தியாளர்களில் முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட பின்னர் மேற்படி செய்தியாளர்களில் சிலரே பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர் எனவும், பலர் அச்சம் காரணமாக பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளாமல் தத்தமது வீடுகளுக்குச் சென்று சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குறித்த செய்தியாளர்கள் பணிபுரியும் ஊடக நிறுவனங்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு அறிவித்துள்ளது.
இதனிடையே நாடாளுமன்றில் நேற்று சுகாதார கட்டளைச் சட்டங்கள் மீதான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விவாதத்தின்போது, நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் எவரும், நாடாளுமன்ற வளாகத்துக்குள் வைத்து கொரோனாத் தொற்றுக்குள்ளாகவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.