லொக் டவுன் கண்ணீர் : ஜீவன்

அசோக் தனது நெடு நாள் காதலி ரேகாவை பல காலமாகத் தேடிக் கொண்டிருந்தான். 
காரணம் அவர்கள் பிரிந்து வெகு காலமாகியிருந்தது. 
அத்தோடு அசோக் வாழ்ந்த நாட்டை விட்டு வெகு தூரமான ஒரு நாட்டில் பல காலமாக அவன்  வேலை செய்து கொண்டிருந்தான். 
 பள்ளியில் ஆரம்பித்த காதல் சின்னதொரு பிரச்சனையால் அதிகரித்து முற்றிய போது இருவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். 
அதன் பின் அவர்களிடம் எந்த தொடர்பும் இருக்கவில்லை.
படிப்பு முடிந்த பின் அசோக் தொழில் நிமித்தம் அந்நிய நாடொன்றுக்கு போக வேண்டி வந்தது.
அதன் பின் பல முறை லீவில் ஊருக்கு போய் வந்தாலும் அவளை தேடிப் பார்க்க வேண்டும் எனும் எண்ணம்  இருக்கவில்லை.
அவர்கள் அந்த ஊரில் இல்லை என நண்பர்கள் சொல்வதை கேட்டான்.
குடும்பத்தோடு வேறொங்கோ போய் விட்டதையும் அவர்கள்  வீட்டில் யாரோ குடியிருப்பதையும் அவ்வழியாக போகும் பார்த்ததும்  கண்ட போது தெரிந்து கொண்டான்.
அசோக் ஊருக்கு போகும் போதெல்லாம் தன் பள்ளி தோழர்களில் சிலரையாவது சந்திப்பான்.
ஆனால் அவர்களிடம் ரேகா எங்கு சென்றுள்ளாள் எனக் கேட்க ,  அவனது மனம் துடித்தாலும் அவர்கள் கேலி பண்ணுவார்கள் என எண்ணியவனாக அந்த எண்ணத்தை மனதுக்குள் அடக்கிக் கொண்டான்.
கடைசியாக ஊருக்கு போன போது அசோக்கோடு ஒன்றாக படித்த செல்வியை தற்செயலாக நண்பன் ஒருவனது திருமண வீட்டில் சந்தித்தான்.
பள்ளி காலத்தில் அவள்தான் அசோக் – ரேகா உறவுக்கு தூதாக இருந்தவள்.
செல்வி மிக கலகலப்பானவள்.
அசோக்கை கண்டதும் செல்வி ஓடி வந்து மகிழ்ச்சியோடு “ஹேய் அசோக் …. எப்படிடா?” என்றாள்.
“லீவில் ஊருக்கு வந்த போது  இங்கு வர முடிந்தது” என்றான் அசோக்.
” ரொம்ப மாற்றம் தெரியுதே” என்றாள் செல்வி
“ம்”
” ரேகாவுக்கு கல்யாணம் ஆச்சு தெரியுமா?”
“ஊகும்”
” அவள் இப்போ அவங்க ஊரிலதான் இருக்கிறா ………” தொடர்ந்து செல்வி பேசிக் கொண்டே போனாள்.
அசோக் காதுகளுக்கு ரேகா கல்யாணமானதை சொன்ன பின் அவள் சொல்லியவை  அவன் காதுகளில் விழவில்லை.
செல்வி சொல்வதை எல்லாம் அசோக் கேட்பதாக நினைத்துக் கொண்டு தொடர்ந்து செல்வி பேசிக் கொண்டேயிருந்தாள்.
” என்ன சிலையாகிட்டே?” என செல்வி தொட்டு பேசிய அந்த வசனம்தான் அசோக்கை மீண்டும் விழிக்க வைத்தது.
பேசிக் கொண்டே வந்தவள் தன் பேஸ்புக் கணக்கில் அசோக்கின் பெயரைத் தேடி அழைப்பை விடுத்து விட்டு ” அக்சப்ட் பண்ணுடா …. ரேகா கூட என் பிரெண்டா முகப் புத்தகத்தில்  இருக்கிறாள்” என்றாள். ஒரே நேரத்தில் பல விடயங்களை பெண்களால் அநாயாசமாக செய்ய முடியும். அப்படித்தான் செல்வியும் இருந்தாள்.
“ம்” என்றவன் அதிகம் பேசவில்லை.
ஆனால் இன்னொரு நாட்டுக்கு வந்து வாழும் போது கூட அவள் நினைவு பெரிதாக வந்தது குறைந்தே இருந்தது. அந்த அளவு வேலை.
தனித்தே வாழ்ந்த அவனால் வீட்டிலும் அவன் வேலைகளை அவனே செய்ய வேண்டி வந்தது. அந்த களைப்பில் எதுவும் மனதுக்கு வரவில்லை.
கொரோனா முழு உலகையும் முடக்கிய போது ஏனையோர் போல அவனும் அவன் வீட்டுக்குள் முடங்கிப் போனான். தனிமையை உணரத் தொடங்கினான்.
செல்வியின் முகப் புத்தக நண்பர்கள் வரிசையில் இருந்த ரேகாவின் தொடர்பை தேடி எடுத்து  ரேகாவின் விபரங்களை பார்த்தான்.
அவளது தனி படங்களை போலவே கணவனோடு உள்ள படங்களும் இருந்தன. பல நேரமாக அந்த பக்கத்தை தோண்டி துளாவினான்.
அதன்பின் நட்பு அழைப்பு ஒன்றை விட தீர்மானித்தான். ஆனால் தயக்கமே அதிகமாக இருந்தது. மனதை சரி செய்து கொண்டு நட்பு அழைப்பு ஒன்றை விடுத்தான்.
நட்பு அழைப்பு ஒன்றை விடுத்தவன் பதில் அனுமதிக்காக  காத்திருந்தான்.
பல நேரமாகியும் எந்த ரியாக்சனும் இல்லை.
அழைத்து ஒருமுறையாவது பேச வேண்டும் போல அவனுக்கு இருந்தது.
எனவே அழைத்து பார்க்க எண்ணியவன் பலமுறை யோசனைக்கு பின் மெசென்ஜரில் அழைத்து பார்க்கும் முடிவுக்கு வந்தான்.
கையிலிருந்த போண் மூலம் மெசென்ஜரில்  கையை வைப்பதும் எடுப்பதுமாக வெகு நேரமாக போராடிக் கொண்டு இருந்தான்.
கடைசியாக அழைத்துதான் பார்ப்போமே எனும் முடிவுக்கு வந்தான்.
ரிங் செய்தான்.
அழைப்பு போய்க் கொண்டிருந்தது.
மறு பக்கமிருந்து பதில் இல்லை.
மீண்டும் அழைத்தான்.
அழைப்பு எடுக்கப்பட்டது.
கொஞ்ச நேர அமைதி தொடர்ந்தது
இரு முனையிலிருந்தும் யாரும் பேசவில்லை.
“ஹலோ” மறு முனையிலிருந்து ஒரு குரல் கேட்டது. அது ரேகாவினுடையதல்ல. அது ஒரு ஆணின் குரல்.
அதிர்ந்து போய் என்ன பேசுவதென தெரியாது அசோக் அமைதி காத்தான்.
மீண்டும் அதே ஆண் குரல் “ஹலோ” என்றது
பதிலுக்கு அசோக்கும் “ஹலோ”  என்றான்.
“வணக்கம்” மறுமுனையில் ஆணின் குரல் கேட்டது.
” நான் அசோக் … தவறாக அழைத்து விட்டேனா? இது என் பள்ளி தோழி ரேகா என நினைத்து அழைத்தேன் ……”வார்த்தைகள் தடுமாற்றமாக அசோக்கிடமிருந்து வெளி வந்தன.
” நான் ரேகாவின் ஹஸ்பண்ட் ” மறு முனையிலிருந்து பதில் வந்தது.
” ரேகா இல்லையா? “
” இருக்கிறாங்க. கொஞ்சம் பொறுங்க கொடுக்கிறேன்”

சற்று நேர இடைவெளி

“ஹலோ………..” என ரேகாவின் குரல் கேட்டது. குரலை கேட்டதும் அடையாளம் தெரிந்தது.
” நலமா இருக்கிறீங்களா? முகப் புத்தகத்தில் பார்த்தேன். அதுதான் பேசலாம் என்று எடுத்தேன் ……”
” கொஞ்சம் பொறுங்க. நான் வந்து செய்றேன் ” அவள் என்னோடு பேசாமல் யாரோடோ பேசுவது புரிந்தது.
” திருமண வாழ்த்துகள் ……..” என அசோக் பேச்சை தொடர இழுக்கும் போதே
“நன்றி” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.
அசோக் அப்படியே சிலையானான். கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் நிலத்தில் விழுந்து தெறித்தது. மனம் இறுகிப் போனது.
  • ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.