இராணுவத்தின் கையில் பொலிவியாவின் எதிர்காலம்? : சுவிசிலிருந்து சண் தவராஜா
ஐக்கிய அமெரிக்காவின் கொல்லைப்புறம் என வர்ணிக்கப்படும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் அரசியல் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை. உலகம் முழுவதும் கொரோனாக் கொள்ளை நோய்க்குப் பயந்து அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் அரசியல் சூடு தணியாத ஒரு பிராந்தியம் அது.
மனித உரிமைகள், நல்லாட்சி, பயங்கரவாத முறியடிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு என்ற பல்வேறு சொல்லாடல்கள் ஊடாகத் தனது மேலாண்மையை நிலைநாட்ட எப்போதும் முயற்சித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சவாலாக விளங்குகின்ற நாடுகளும் இந்தப் பிராந்தியத்தில் இல்லாமல் இல்லை.
பிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா ஆகிய இரண்டு உலகப் புரட்சியாளர்களை அறிமுகஞ் செய்த கியூபா இந்தப் போக்கைத் தொடங்கி வைத்தது. இன்றுவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அசைக்க முடியாத ஒரு தேசமாகவும் அது நிலைத்து நிற்கின்றது.
நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட பொலிவியாவில் 2005 ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்த முதலாவது பழங்குடி இனத்தவரான, மக்களின் பேராதரவைப் பெற்றவரான ஈவோ மொரலஸ் 14 ஆண்டுகளின் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அந்த முடிவுகளுக்கு எதிராக வலதுசாரிகளின் ஆர்ப்பாட்டத்தை எதிர்கொண்டு, இராணுவம் கைவிட்ட நிலையில், நாட்டைவிட்டுத் தப்பியோடி முதலில் மெக்சிக்கோவிலும் பின்னர் ஆர்ஜென்ரீனாவிலும் அரசியல் தஞ்சம் பெற்றதையும் பார்த்தோம். 2019 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அதேபோன்ற மற்றுமொரு நாடகம் அந்த நாட்டில் அரங்கேறும் வாய்ப்பு தற்போது உருவாகியிருப்பதைப் பற்றிப் பேசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
கிட்டத்தட்ட இதே போன்றதொரு நிலைமை தற்போது பொலிவியாவில் தோன்றியுள்ளது.
இராணுவம் என்ன செய்யப் போகின்றது?