தமிழ்த் தலைமைகள் கூட்டணியாக களமிறங்கிச் செயற்பட வேண்டும்! ரெலோ
தமிழ்த் தலைமைகள் கூட்டணியாக
களமிறங்கிச் செயற்பட வேண்டும்!
ரெலோவின் இளைஞர் அணித் தலைவர் அறிக்கை
“தமிழ்த் தலைமைகள் கட்சி அரசியல் மற்றும் அறிக்கை அரசியலை விட்டு கூட்டாக இணைந்து களத்தில் இறங்கிச் செயற்பட வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் இளைஞர் அணித் தலைவருமான சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசின் அடக்கு முறைகளையும் இலங்கைத் தீவில் மையங் கொண்டுள்ள பூகோள பிராந்திய அரசியல் சதுரங்கத்தை கையாளவும் வெறுமனே ஊடக அறிக்கைகள் விடுவதற்கு முன்னர் தமிழ்த் தலைமைகள் செயல் நடவடிக்கையில் களத்தில் இறங்க வேண்டும்.
அத்துடன் தந்திரோபாயமாகப் பொறுப்புடன் இலங்கை அரசுக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் அடங்கிய அறிக்கைகளை தவிர்த்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சாணக்கியமாக களச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
நகர்வுகளை ஏற்படுத்தாமல் வாய்ப்பந்தல் போடுவது நான் முந்தி நீ முந்தி அறிக்கை விடுவது மீதமாக நம்பி இருக்கும் தமிழ் மக்களை நட்டாற்றில் விடுவதாக அமைந்துவிடும். தமிழ் மக்களின் அரசியலை முன்னகர்த்தக் கூடிய ஆளுமை கொண்ட இளைய தலைவர்களை உருவாக்க வேண்டும்.
செயல் நடவடிக்கைகள் மூலம் கடந்த காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய வரலாற்று சம்பவங்களை மீள நிலை நிறுத்தி இளைய தலைமுறையை தேசப் பற்றுள்ளவர்களாக வழிநடத்துவதன் மூலம் தான் தமிழர்களின் ஐனநாயக அரசியலை அவர்களின் அபிலாஷைகளை சுதந்திர தாகத்தின் நெருப்பை அணைய விடாது பாதுகாத்து அதனை வென்றெடுக்க வழிகாட்டலாம்.
எமது முன்னைய தலைவர்கள் 1956 காலி முகத்திடல் அகிம்சைப் போராட்டம் 1957 திருமலை யாத்திரை போன்றன 1957இல் பண்டா – செல்வா ஒப்பந்தம் உருவாகவும், 1961இல் வடக்கு, கிழக்கு தாயகம் தழுவிய மாபெரும் அஹிம்சைப் போராட்டம் 1965 இல் டட்லி – செல்வா உடன்படிக்கை உருவாகவும் வழிவகுத்தன.
இந்த உடன்படிக்கையில் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காவிட்டாலும் சிங்கள ஆட்சியாளர் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தமிழர் தாயகமாக ஏற்றுக்கொண்ட பதிவு வரலாற்று ஆதாரமாக உள்ளது.
ஆனால், அன்றைய நிலையை விட இன்று தமிழர்களின் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. இது விடுதலைப் போராட்டத்தில் விதையான தியாகிகளின் தியாகத்தால் உருவானது. ஆகவே, அறிக்கைகளை விட களச் செயற்பாடுகளே அவசியமாவை. இது வரலாற்று உண்மை.
தற்போதைய அரசு முள்ளிவாய்க்காலுக்கு அடுத்தபடியான பாரிய தமிழின இருப்பை அழிப்பதில் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை முன்னகர்த்த ஆரம்பித்து விட்டது. வடக்கு, கிழக்கில் இன விகிதாரசாரத்தை மாற்றியமைப்பதும் காணிகளை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதும் அதன் நோக்கம். இது தடுக்கப்படாவிட்டால் தேசம், தேசியம் எல்லாம் அறிக்கையாக மட்டுமே எதிர்காலத்தில் இருக்கும்.
ஆகவே, தமிழ்த் தலைவர்கள் கட்சி அரசியலைத் தாண்டி கூட்டாக ஒன்றிணைந்து செயல் நடவடிக்கையில் விரைவாக இறங்க வேண்டும்” – என்றுள்ளது.