உயிரிழந்த உறவுகளை நினைவுகூற மக்களுக்குப் பூரண உரித்துண்டு. சுமந்திரன்
உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து கல்லறைகளில் மலர் தூபி அஞ்சலிக்கத் தமிழ் மக்களுக்குப் பூரண உரித்துண்டு!
நாடாளுமன்றில் சுமந்திரன் முழக்கம்
“தமிழ் மக்கள் தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதற்கு அவர்களுக்குப் பூரண அதிகாரம் உண்டு. இந்தப் புனித மாதமான கார்த்திகையில் அவர்கள் தமது மரணித்த உறவுகளை அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று மலர் தூவி அஞ்சலித்து நினைவுகூர்வர். இதை எவரும் தடுக்க முடியாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் போரில் உயிரிழந்த அவர்களது உறவுகளை நினைவுகூருகின்றமை மறுக்கப்படுகின்றது. சரியான எந்தக் காரணமும் இன்றி பொலிஸார் நீதிமன்றத்தை நாடி 106 ஆவது சரத்தின் கீழ் பொதுப்போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தலாம் என்ற காரணத்தைக் கூறி நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெறுகின்றார்கள். தற்போது சட்ட அங்கீகாரமற்ற கொரோனா சட்டத்தின் கீழ் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட இவ்வாறான உரிமைகள் மறுக்கப்படலாம்.
தெற்கில் ஜே.வி.பியினர் உயிர்நீத்த தமது கட்சி சார்ந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. ஆனால், எமது தமிழ்ப் பிரதேசங்களில் மட்டும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை நியாயமற்ற ஒன்று.
தமிழ் மக்களுக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கின்ற மாதமே இந்த கார்த்திகை மாதம். இந்தப் புனித மாதத்தில் தமது சகோதரர்கள், பிள்ளைகள் மற்றும் உறவுகளை நினைவுகூர்வதற்கு அவர்களுக்குப் பூரண உரித்து உள்ளது.
பிரிவு 106 இன்கீழ் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல் என்ற காரணத்தைக் காட்டி நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுகின்ற செயற்பாட்டை ஏற்கமுடியாது.
தமிழ் மக்கள் பொதுப்போக்குவரத்துக்கோ, ஏனைய மக்களுக்கோ எந்த இடையூறும் விளைவிக்காமல்தான் தமது உறவுகளை அவர்களின் துயிலும் இல்லங்களுக்குச் சென்று அங்குள்ள கல்லறைகளில் மலர் தூவி அஞ்சலித்து நினைவுகூர்கின்றார்கள். இதை எவரும் தடுக்க முடியாது. அது அவர்களின் உரிமை” – என்றார்.