விஜய் டி.வி. சீரியல் நடிகரான இலங்கையர் வெட்டிக்கொலை…!
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான ஜாக்குலின் சின்னத்திரை நடிகையாக நடித்து வரும் சீரியல் தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர். இந்த சீரியலில் ஜாக்குலினுக்கு ஜோடியாக சித்தார்த் நடித்து வருகிறார். இவர்களுடன் உஷா, எலிசபெத், பி.ஆர்.வரலட்சுமி, அஞ்சலி பிரபாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
இந்நிலையில் இந்த சீரியலில் துணை நடிகராக நடித்து வந்த செல்வரத்தினம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 45வயதான செல்வரத்தினம் சென்னை எம்.ஜி.ஆர். நகர் வள்ளல்பாரி தெருவில் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இலங்கை தமிழரான இவர் துணை நடிகராக மட்டுமின்றி, ரியல் எஸ்டேட், வீடு கான்ட்ராக்டர் வேலைகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 6.30.மணியளவில் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோடு பகுதிக்கு ஆட்டோவில் வந்த 4 பேர் வள்ளல் பாரி தெருவில் உள்ள செல்வரத்தினம் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டின் வாசலுக்கு வந்த அந்த நபர்கள் செல்வரத்தினத்தை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதில் செல்வரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிறகு வெட்டிய நான்கு பேரும் அருகாமையில் உள்ள இல்லத்தில் இருந்த சி.சி.டி.வி காமிராவை சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தப்பிய நபர்களை தீவிரமாக தேடி வரும் போலீசார், தொழிலில் ஏற்பட்ட தகராறு காரணமாக செல்வரத்தினம் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.