டெங்கு கட்டுப்பாட்டு மீளாய்வுக் கலந்துரையாடல்.
டெங்கு கட்டுப்பாட்டு மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று 17.11.2020 காலை 11 மணிக்கு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாநகர முதல்வர்,பிரதேச செயலாளர்கள், பிராந்திய தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி, பிராந்திய பொதுசுகாதார பரிசோதர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள்,மாநகர சபை உத்தியோகத்தர்கள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலீஸ் தரப்பினர் மற்றும் துறைசார் சுகாதார தரப்பினர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் அண்மைக் காலத்தில் covid19 தொற்றிடர் ஏற்பட்ட பயணக்கட்டுப்பாடுகள், பாடசாலைகள் நடைபெறாமை டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக டெங்கு தாக்கல் வீதம் குறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும் யாழ்மாவட்டத்தில் மிக முக்கிய பிரச்சினையாக தண்ணீர் தொட்டிகள், பழைய ரயர்கள் மற்றும் உக்காத பிளாஸ்டிக் கப்களில் தண்ணீர் தேங்கி நிற்றல் போன்றவற்றால் குடம்பிகளின் அளவு அதிகரிக்கிறது.எனவே நீர்தொட்டிகளின் உட்புற சுவரை அடிக்கடி சுத்தம் செய்வதுடன் ,நீர்த்தாங்கிகளை மூடி வைத்தல், பிளாஸ்ரிக் போன்ற உக்காத பொருட்களை முறைப்படி அகற்றல், கட்டுமானப்பணிகளில் ஈடுபடுவோர் நுளம்புகள் பெருகாத வண்ணம் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயற்படும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இவை தொடர்பான பொதுமக்களிடையே விழிப்புணர்வை தூண்டும் வகையில் பிரதேச ,கிராம மட்ட குழுக்களை பொலீஸ் தரப்பினர்,உள்ளூராட்சி திணைக்களத்தினர் மற்றும் சுகாதார தரப்பினருடன் இணைந்த வகையில் சிரமதானங்கள், துண்டுப்பிரசுர விநியோகம், மற்றும் மேற்பார்வை என்பவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மேலும், இங்கு கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் அவர்கள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் உக்காத பிளாஸ்டிக் பொருட்களை முறையாக முகாமைத்துவம் செய்யும் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதனை செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் இவ் டெங்கு கட்டுப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைக்காக பிரதேச மற்றும் கிராமிய குழுக்களை ஈடுபடுத்தி விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அதனுடன் இணைந்த வகையில் Covid19 தொற்றிடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தேவையான விழிப்புணர்வு பிரச்சார செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். இதற்காக அனைத்து சுகாதார தரப்பினர்,பொலிஸ் தரப்பினர் மற்றும் பிரதேச,கிராம மட்ட குழுக்களின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும் Covid19 தொற்றிடர் தொடர்பில் கருத்து தெரிவித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேல்மாகாணம் மற்றும் ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து எமது மாவட்டத்திற்கு யாராவது வருவார்களாயின் அவர்கள் பற்றிய விபரங்களை உடனடியாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவிக்கும்படியும் covid19 சந்தேக மரணங்கள் மற்றும் வீட்டில் ஏற்படும் covid19 சந்தேக இறப்புகள் தொடர்பான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுமெனவும் மரணச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தி 3 மணித்தியாலங்களுக்குள் அந்நிகழ்வை முடிவுறுத்தவும், குறித்த நபரின் இறுதிநிகழ்வு மின்சார தகனம் மட்டுமே செய்யப்படலாம் எனவும் தெரிவித்தார்.