யாழ். குடாநாட்டை முடக்கும் தீர்மானம் இல்லை! மக்கள் எவரும் குழப்பமடைய வேண்டாம்.கேதீஸ்வரன்.
யாழ். குடாநாட்டை முடக்கும் தீர்மானம் இல்லை! – மக்கள் எவரும் குழப்பமடைய வேண்டாம் என்கிறார் கேதீஸ்வரன்
“யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது மக்களை அச்சுறுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது.”
– இவ்வாறு கடும் சீற்றத்துடன் தெரிவித்தார் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறு எந்தவிதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.
காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், குறித்த நபருடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த 63 பேருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பி.சி.ஆர். முடிவுகளில் பலருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டால் மாத்திரம், சில வேளைகளில் காரைநகர் பிரதேசம் முடக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் தற்போது வரை எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை” – என்றார்