மன்னாரில் கொரோனாத் தொற்றுறுதியான நால்வரும் கிளிநொச்சிக்கு அனுப்பி வைப்பு.
மன்னாரில் கொரோனாத் தொற்றுறுதியான நால்வரும் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ-29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நபர்கள் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நேற்று (நவ-30) திங்கட்கிழமை மாலை விசேட அம்புலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சியில் அமைந்துள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் 3 பேர் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள சவேரியார் புரத்தில் மீன் வாடி அமைத்து கடற்தொழிலில் ஈடுபட சிலாபத்தில் இருந்து வந்தவர்கள்.
இவர்கள் கடந்த 19 ஆம் திகதி சிலாபத்தில் இருந்து வருகை தந்து வரையாறுக்கப்பட்ட நகர்வு என்ற அடிப்படையில் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் கடலுக்குச் செல்லவும், சமூகத்திற்குள் செல்லாமல் இருக்கவும் அனுமதிக்கப்பட்டு கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
வருகை தந்தவர்களில் 6 பேரூக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3 நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவர்களுடன் தொடர்பாக இருந்த, அடிப்படை உதவிகளை மேற்கொண்ட 15 உள்ளூர் வாசிகள் உள்ளடங்களாக 18 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த 3 நபர்களும், இரணை இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30) மாலை விசேட சுகாதார பாதுகாப்புகளுக்கு மத்தியில் கிளிநொச்சியில் அமைந்துள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த நபர்களுடன் தொடர்பு பட்டவர்களையும் அடையாளம் கானும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நடவடிக்கைகளின் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன், முசலி பிரதேச செயலாளர், முசலி சுகாதார வைத்திய அதிகாரி, முசலி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார பரிசோதகர்கள், சிலாவத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.