புரவிப் புயலை மாவட்டளவில் எதிர்கொள்வதற்கான விசேட முன்னாயத்த கலந்துரையாடல்.
புரவிப் புயலை மாவட்டளவில் எதிர்கொள்வதற்கான விசேட முன்னாயத்த கலந்துரையாடல்.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் ஏற்படவிருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ள புரவிப் புயலால் ஏற்படவுள்ள அனர்த்தங்களினை மாவட்ட மட்டத்தில் தடுப்பதற்கான விசேட முன்னாயத்த கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இன்று(01) பி.ப 3.00மணிக்கு இடம்பெற்றது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அனர்த்தங்களின் போது மேற்கொள்ளப்படவேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள், அவற்றை குறைப்பதற்கான திட்டமிடல்கள் தொடர்பாக அதற்குப் பொறுப்பான குறித்த திணைக்களத் தலைவர்களோடு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக கரையோரப்பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கான செயன்முறைகள், குளங்களின் தற்போதைய நிலைப்பாடுகள், அனர்த்தங்களை ஏற்படுத்தம் வகையில் அடையாளப்படுத்தப்பட்ட மரங்கள் மற்றம் மரக்கிளைகளை அப்புறப்படுத்தல், மின் அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை அனர்த்தங்களின் போது நடைமுறைப்படுத்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்கள பிரதிப்பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர், மாவட்ட விவசாயப்பணிப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதேச சபைகளின் செயலாளர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.