ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் ‘T20’தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணிக்கு மாத்யூ வேட், ஷார்ட் (9) ஜோடி துவக்கம் கொடுத்தது. வேகமாக ரன்கள் சேர்த்த வேட், 25 பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 32 பந்தில் 58 ரன்கள் விளாசினார். மேக்ஸ்வெல் 22 ரன் எடுத்தார். ஸ்மித் 46, ஹென்ரிக்ஸ் 26 ரன்கள் எடுத்தனர்.ஆஸ்திரேலிய அணி 20 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் நடராஜன் 2, சகால் 1, ஷர்துல் தாகூர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணிக்கு ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவரில் 9 ரன் மட்டும் எடுத்த இந்தியா, ஆன்ட்ரூ டை வீசிய3வது ஓவரில் 15 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெலின் அடுத்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. 4.5 ஓவரில் இந்தியா 50 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் ராகுல் (30) அவுட்டானார். தவானுடன் இணைந்தார் கோஹ்லி. இருவரும் வேகமாக ரன்கள் எடுத்தனர். 35வது பந்தில் அரைசதம் அடித்த தவான் (52), ஜாம்பா ‘சுழலில்’ அவுட்டானார். இதே ஓவரில் கோஹ்லி, ஒரு சிக்சர் அடித்து உதவ, இந்திய அணி 12 ஓவரில் 105/2 ரன்கள் எடுத்தது.

அறிமுக வீரர் சாம்ஸ் ஓவரில், பவுண்டரி, சிக்சர் என அடுத்தடுத்து அடித்த சாம்சன் (15) நிலைக்கவில்லை. தேவையான ரன்ரேட்டும் (36 பந்தில் 72 ரன்) எகிறியது. ஆன்ட்ரூ டை வீசிய 15வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 18 ரன்கள் எடுத்தார் கோஹ்லி. இந்நிலையில் சாம்ஸ் ‘பவுன்சரில்’ கோஹ்லி (40) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடைசி ஓவரில் இந்தியா வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. சாம்ஸ் பந்து வீசினார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த பாண்ட்யா, அடுத்த பந்தை சிக்சருக்கு அனுப்பினார். 3வது பந்து பவுன்சராக சென்றது. கடைசி 3 பந்தில் 6 ரன் தேவை என்ற நிலையில், 4வது பந்தில் பாண்ட்யா ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. பாண்ட்யா (42), ஸ்ரேயாஸ் ஐயர் (12) அவுட்டாகாமல் இருந்தனர். இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் ‘டுவென்டி-20’ தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.

 

Leave A Reply

Your email address will not be published.