தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் : உடன் விசாரியுங்கள். மனோ கணேசன்
தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். குற்றச்சாட்டுகளை உடனடியாக விசாரியுங்கள் என முன்னாள் அமைச்சரான மனோ கணேசன் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
1,300 இரண்டாம் மொழி பயிற்றுனர்களுக்கான நியமனங்கள், அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோரின் பங்குபற்றலுடன் அலரி மாளிகையில் ஜூலை 10ம் திகதி வழங்கப்பட்டன. இந்நியமனங்கள் அமைச்சரவைக்கு என்னால் சமர்பிக்கப்பட்ட, அமைச்சரவை பத்திரத்துக்கு கிடைத்த ஒப்புதலின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டன. அன்றைய கல்வி அமைச்சரும், நிதி அமைச்சரும் விசேட ஒப்புதல்களை வழங்கி இருந்தனர். அப்படி இல்லாவிட்டால், இந்நிகழ்வில் அன்றைய பிரதமர், கல்வி அமைச்சர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் எவ்வாறு கலந்து கொள்வார்கள்?
எனது அமைச்சின் கீழ்வந்த, தேசிய மொழி மற்றும் கல்வி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் தென்னக்கோன் மற்றும் இப்போது என் மீது குற்றம் சுமத்தும் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஹேரத் ஆகியோரே இந்நிகழ்வை அலரி மாளிகை மண்டபத்தில் நடத்தினார்கள்.
இரண்டாம் மொழி பயிற்றுனர் பயிற்சிகளுக்காக நமது நல்லாட்சி அரசின் நிதியமைச்சு எனது வேண்டுகோளை ஏற்று 400 மில்லியன் ரூபாய்களை முதற்கட்டமாக இந்த திட்டத்துக்கு ஒதுக்கி இருந்தது. ஆனால், புதிய அரசு பதவிக்கு வந்த உடன் இத்திட்டம் இடை நிறுத்தப்பட்டு, நிதி திறைச்சேரியால் மீளப்பெறப்பட்டது. இது இந்த அரசாங்கத்தின் பிழையான கொள்கை.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து இடை நிறுத்தப்பட்ட இந்த இரண்டாம் மொழி பயிற்றுனர்கள் நியமனங்களை மீண்டும் வழங்குவோம். இதன் மூலமே உணமையான தேசிய நல்லிணக்கம் இந்நாட்டில் ஏற்படும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
முன்னாள் எம்பி மனோ கணேசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
இந்நிலையில், பிரசாத் ஹேரத் என்ற இவர் இல்லாத போது, இவரது அலுவலகத்துக்கு சென்று, இவரது கையெழுத்தை தயாரித்து, நியமனதாரிகளுக்கு நான் பகிர்ந்தளித்தேன் என என் மீது குற்றம் சாட்டுவது அரசியல் காரணங்களுக்காக இட்டுக்கட்டிய மிக மிக கேவலமான பொய்.
என்மீது அநியாயமான பொய் குற்றச்சாட்டுகளை ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சுமத்தி விட்டு, வெளியே வந்து “தமிழ் மக்களுக்காக முன்னிலையாவதாக கூறி அமைச்சர் மனோ கணேசன் இனவாத செயல்களையே முன்னெடுத்தார்” என கூறியதன் மூலம் பிரசாத் ஹேரத் என்ற இந்த நபர் தான் யார் என்பதையும், இவரது உண்மையான நோக்கம் என்ன என்பதையும், இவர் உண்மையில் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதையும் அடையாளப்படுத்தி உள்ளார்.
என்னை நம்பி வாக்களித்து தெரிவு செய்யும் மக்களுக்காக தேசிய அரங்கில் முன்னிலையாவது, குரல் கொடுப்பது, சண்டை போடுவது, இனவாதம் என்றால் நான் இனவாதியாகவே எப்போதும் இருந்து விட்டு போகிறேன். இது நான் எப்போதும் கூறும் பதில் ஆகும்.
தேர்தல் நடைபெற போகும் இவ்வேளையில் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்னாள் பிரபல அமைச்சர்கள் மீது சுமத்துவதும், குறிப்பாக சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி தலைவர்கள் மீது சுமத்துவதும், அதன்மூலம் ஊடக தலைப்புகளை உருவாக்கி எம்மீது அழுத்தம் செலுத்த முயல்வதும் இன்றைய அரசின் நோக்கங்கள். எனவே நான் இதுபற்றி ஆச்சரியப்படவில்லை.
என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கண்டு எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. என் மீது எந்த வழக்கும் இல்லை. என் மீது எந்த போலிஸ் புகாரும் இல்லை. எனக்கு எதிராக எந்த நீதிமன்றமும் தீர்ப்பு எதையும் வழங்கவும் இல்லை. அமைச்சராக இருந்த போதுகூட அரச வரப்பிரசாதங்களை கூட அனுபவிக்க விரும்பியிராதவன் நான். இன்று, ஒரு வழிப்போக்கர் போகிற போக்கில் அரசியல் காரணங்களுக்காகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் எனக்கு எதிராக ஏதோ புகார் கொடுக்க, அது என்னைப்பற்றிய செய்தி என்பதால் மாத்திரம் ஊடகத்தில் ஒரு செய்தி தலைப்பாக வருகிறது. இதுதான் இங்கே நடக்கிறது.
அமைச்சர்கள் சஜித் பிரேமதாச, ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, ரிசாத் பதுர்தீன் ஆகிய முன்னாள் சக அமைச்சர்களின் மீதும் பல புகார்கள் சொல்லப்பட்டன. இப்போது என் மீது சொல்லப்படுகிறது. எங்களை கண்டு இவர்கள் பயப்படுகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். இதைக்கண்டு கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் ஒரேயொரு நோக்கில் அரசியல் செய்யும் சோரம் போன சில தமிழர்களும் துள்ளிக்குதிக்கின்றார்கள்.
எது எப்படி இருந்தாலும், என் மீதான எந்த குற்றச்சாட்டுகளையும் உடனடியாக விசாரிக்கும்படி, இன்று நான் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.
கொரொனா பரிசோதனைகள் பற்றி நான் பேசியபோது இப்படித்தான் ஒரு அரசு சார்பு மத துறவி என்னை கைது செய்து விசாரிக்கும்படி பொலிஸ் மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்தார். பொலிஸ் வரும்வரை நான் காத்திருந்தேன். பொலிஸ் வரவே இல்லை. இன்று இந்த ஆணைக்குழுவிடம் எந்தவித நியாயமுமற்ற குற்றச்சாட்டுகளை இதேபோல் முன் வைத்துள்ளார்கள்.
இந்த பிரசாத் ஹேரத், தனிப்பட்ட முறையில் என் மீது கோபம் கொண்டுள்ளமைக்கு பிரதான காரணம் இருக்கின்றது. எனது அமைச்சின் கீழ்வந்த, தேசிய மொழி மற்றும் கல்வி பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்துக்கொண்டே பிரசாத் ஹேரத், மொழிக்கல்வி கலாச்சார நிறுவனம் என்ற பெயரில் வேறு ஒரு தனியார் நிறுவனத்தை இவர் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் இவரும், இவரது மனைவியும் பங்காளர்கள். ஒரு அரச அதிகாரி, அரசு பணியில் இருக்கும் போது, அதே நோக்கங்களை கொண்ட தனியார் நிறுவனம் ஒன்றை நடத்துவது தவறாகும். இது உட்பட 19 முறைக்கேடல் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி தேசிய மொழி மற்றும் கல்வி பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக சபை இவரை பணியில் இருந்து இடை நிறுத்தும்படி ஏகமனதாக என்னை கோரியது.
இதையடுத்து, எனது அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் நிதி, கல்வி அமைச்சுகளின் பிரதிநிதிகள் அடங்கிய இந்த சபையின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, தேசிய மொழி மற்றும் கல்வி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் தென்னக்கோன் என்னை கோரினார். இதையறிந்த பிரசாத் ஹேரத் நிர்வாக சபையின் முடிவை ஏற்று தன்னை பணி இடை நிறுத்தம் செய்ய வேண்டாம் என என்னை சந்தித்து, பலமுறை கெஞ்சினார். சபையின் ஏகமனதான முடிவை நான் ஏற்காமல் இருக்க முடியாது என நான் இவருக்கு கூறி விட்டேன். இதையடுத்து, இவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டார்.
உண்மையில் செப்டம்பர் மாதம், பிரசாத் ஹேரத் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, இதே தேசிய மொழி மற்றும் கல்வி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் தென்னக்கோன் இதே இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் புகார் செய்துள்ளார். அந்த புகார் இன்னமும் விசாரிக்கப்படவில்லை.
இன்று, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, தனது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி, இவர் மீண்டும் பதவிக்கு பின்கதவால் வந்துள்ளார். உண்மையில் இப்படி இடைநிறுத்தப்பட்ட, ஒரு அரச பணியாளர், நிறுவனத்தின் நிர்வாக சபை மறு முடிவு எடுக்கும் வரை மீண்டும் பதவி ஏற்க முடியாது. இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அரச நிர்வாக கோவைகளை மீறிய மிகப்பிழையான செயல்.
இந்நிலையில் என் மீதான கோபத்தை, முன்னாள் அமைச்சர்கள் மீது அழுத்தம் செலுத்தும் புதிய அரசாங்கத்தின் போக்கை பயன்படுத்தி, இத்தகைய குற்றச்சாட்டை என் மீது இவர் இன்று சுமத்தியுள்ளார். இதுவே இதன் பின்னணி ஆகும்.
இந்நிலையில் நாடு முழுக்க நடைபெற்ற இந்நிறுவன பயிற்சி நிகழ்வுகளுக்கு உணவளிக்கபட்டமை என் தனிப்பட்ட செயலாளரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடைபெற்றன என இவர் கூறுவது கேலிக்கூத்து. நிகழ்வுகளுக்கு அவசியமான அனைத்து வெளியார் சேவைகளும் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் இருந்தே பெறப்பட்டன. வேறு அடிப்படைகளில் இவை செய்யப்பட முடியாது. மேலும் இவை அனைத்தையும் தீர்மானிப்பது, தேசிய மொழி மற்றும் கல்வி பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் என்ற பதவியிலிருந்த பிரசாத் ஹேரத் என்ற இவரே ஆகும். இந்நிலையில் இவர் சூட்டும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்ற பொய்கள் ஆகும். இந்த குற்றச்சாட்டுகளையே உடன் விசாரிக்க வேண்டுமென்று நான் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளேன்.
பாடசாலைகளில் சுமார் 6,000 மொழி ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. இந்த வெற்றிடங்களை நிரப்ப கல்வி அமைச்சு அக்கறை காட்டுவதில்லை. இந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டாலேயே, இந்நாட்டின் புதிய தலைமுறை இரண்டு மொழிகளையும் கற்க முடியும். இரண்டு மொழிகளையும் கற்றாலேயே எதிர்கால அரசு சேவையில் இரு மொழி கற்ற அதிகாரிகள் உருவாகுவார்கள். இதைவிட இந்நாட்டின் மொழி பிரச்சினையை தீர்க்க வேறு வழி கிடையாது. வெறுமனே தமிழ் மொழியையும் ஒரு ஆட்சி மொழி என்று அரசியலமைப்பில் எழுதி வைப்பதில் ஒரு பயனும் கிடையாது. இந்த நல்ல தூரநோக்கின் அடிப்படையில், அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்த திட்டத்தை நான் முன்னேடுத்தேன்.
இரண்டாம் மொழி பயிற்றுனர் பயிற்சிகளுக்காக நமது நல்லாட்சி அரசின் நிதியமைச்சு எனது வேண்டுகோளை ஏற்று 400 மில்லியன் ரூபாய்களை முதற்கட்டமாக இந்த திட்டத்துக்கு ஒதுக்கி இருந்தது. ஆனால், புதிய அரசு பதவிக்கு வந்த உடன் இத்திட்டம் இடை நிறுத்தப்பட்டு, நிதி திறைச்சேரியால் மீளப்பெறப்பட்டது. இது இந்த அரசாங்கத்தின் பிழையான கொள்கை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து இடை நிறுத்தப்பட்ட இந்த இரண்டாம் மொழி பயிற்றுனர்கள் நியமனங்களை மீண்டும் வழங்குவோம். இதன் மூலமே உணமையான தேசிய நல்லிணக்கம் இந்நாட்டில் ஏற்படும்.
Comments are closed.