லொஸ்லியாவின் தந்தையினது உடல் இலங்கையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
கனடாவில் இறந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட லொஸ்லியாவின் தந்தை மரியநாயகம் மரியநேசனது சடலம் கோவிட் 19 தொற்றுநோயால் இறக்காத காரணத்தால் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பொஸ்-03 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா. இவரது தந்தை, மரியநேசன் மாரடைப்பு காரணமாக கனடா நாட்டில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
நேற்று முன்தினம் கனடாவில் இறந்த மரியநேசன் என்ற 52 வயது லொஸ்லியாவின் தந்தையின் சடலம் இலங்கைக்கு கனடாவிலிருந்து TK730 விமானத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 தொற்றுநோயால் வெளிநாடுகளில் இறந்தவர்களின் உடல்களைக் கொண்டு வரும் போது நீர்கொழும்பு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு, நீர்கொழும்பில் தகனம் செய்யப்படுவது வழமையாக உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட போதிலும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் உடல்களை நீர்கொழும்பில் தகனம் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட நபரின் உடலை உறவினர்களிடம் கையளித்தாக சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா, நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையின் கொரோனர் ஸ்ரீ ஜெயந்த விக்ரமரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவருக்கு கோவிட் தொற்று ஏற்படாததால் அவரது உடலை கையளிக்குமாறு அக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இறந்தவரின் உறவினர்கள் மூன்று பேர் வந்து உடலை பெற்றுச் சென்றுள்ளனர்.
இறந்தவரின் முகவரி எண் 640, ஷைத்தி லேன், திருகோணமலை எனவும் தெரிவிக்கப்பட்டது.
சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் அமல் ஹர்ஷா டி சில்வா வெளியிட்டுள்ள கடிதம் கீழே.