வடக்கிலும் தெற்கிலும் சிறைகளிலும் கொல்லப்பட்டவர்கள் எமது உறவுகளே : மங்கள
வடக்கிலும் தெற்கிலும் சிறைகளிலும்
கொல்லப்பட்டவர்கள் எமது உறவுகளே
அவர்கள் தேசத்தின் பிள்ளைகள் என்கிறார் மங்கள
“தென்பகுதியில் கொல்லப்பட்ட சிங்களவர்கள், வடபகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள், மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் எங்களின் உறவுகள்; எங்கள் நாட்டின் பிள்ளைகள் என்பதை நாங்கள் மறக்க முடியாது.”
– இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அனைவரையும் சட்டத்தின் கீழ் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“ஒரு நாடு ஒருசட்டம் என்பதை வெறும் வார்த்தைகளுக்கு அப்பால் சென்று உண்மையில் நடைமுறைப்படுத்துவது எப்படி என நாட்டை நேசிப்பவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
மஹர சிறைச்சாலை கலவரத்தின் பின்னர் சிறைச்சாலை வாசலில் தாய்மார்கள் கண்ணீர்விட்டு அழுதது தென்பகுதியில் கண்ணீர்விட்ட தாய்மார்களை நினைவுபடுத்தியது.
அதேவேளை, வடக்கின் தாய்மார்களின் கண்ணீரை மாத்திரமில்லை அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்ணீரையும் நாங்கள் பார்த்துள்ளோம்.
இலங்கையில் படுகொலை செய்யப்படுபவர்கள் எங்கள் தேசத்தின் பிள்ளைகளாவர்.
தென்பகுதியில் கொல்லப்பட்ட சிங்களவர்கள், வடபகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள், மஹர சிறைச்சாலையில் கொல்லப்பட்ட கைதிகள், 2012இல் வெலிக்கடையில் கொல்லப்பட்ட கைதிகள் எங்களின் உறவுகள்; எங்கள் நாட்டின் பிள்ளைகள் என்பதை நாங்கள் மறக்க முடியாது.
தொடர்ச்சியாக இடம்பெறும் விடயங்களைப் பார்க்கும்போது சுதந்திரத்துக்குப் பின்னர் தாய்மார்களின் கண்ணீரைத் தவிர மக்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை என்ற கருத்தை நிராகரிக்க முடியாதது போல் தோன்றுகின்றது” – என்று குறிப்பிட்டுள்ளார்.