உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு கொரோனாத் தொற்றால் முடக்கம்! – யாழ். மாவட்ட அரச அதிபர் அறிவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இன்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு தற்போது பரவியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாது இருப்பதற்காகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடக்கத்தின் காரணமாக மக்கள் அச்சமடையாமல் தமது வீடுகளிலேயே இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 30 கிராம அலுவலகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கொரோனாத் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் யாழ். மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.