தமிழில் பேசிய நடராஜன்.சிட்னியில் நெகிழ்ச்சியின் உயரிய தருணம்.
தமிழில் பேசிய நடராஜன். “சொல்ல
வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்” – சிட்னியில்
நெகிழ்ச்சியின் உயரிய தருணம் .
சிட்னியில் செவ்வாய் கிழமை நடந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில்,
இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரில் சிறப்பு ஆட்ட நாயகனுக்கான விருது ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார்.
இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், டி20 தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதன் பிறகு சோனி தொலை காட்சியில் தொடர் குறித்த தகவல்களை வழங்கிய முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்தி, நடராஜனை அழைத்து அவருடன் தமிழில் பேசினார்.
அப்போது அவர், “ஆஸ்திரேலியா வந்து இங்கு மிகப்பெரிய அணியுடன் ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றி பெறுவது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.
இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
எதுவும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். நான் நெட் பெளலராகவே வந்தேன்.
என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருந்தேன். அது எனக்கு உதவியாக இருந்தது.
சக வீரர்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்தனர். என்னை எல்லோரும் ஊக்குவித்தனர்.
அது எனக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்தது” என்றார் நடராஜன்.
“நான் எனது யார்க்கர் மீது நம்பிக்கை வைத்து இருந்தேன். விக்கெட்டுக்கு ஏற்றாற்போல கப்டனிடம் எப்படி போலிங் செய்ய வேண்டும் என ஆலோசனை கேட்பேன்.
கப்டன், கீப்பர் சொல்வது போல செயல்பட்டேன். முழு ஈடுபாட்டுடன் எனது திறமையை வெளிப்படுத்தினேன். வேறு மாற்றம் எதுவும் செய்யவில்லை.
ஐபிஎல் தொடரில் எப்படி ஆடினேனோ அதுபோலவே இங்கேயும் ஆடினேன்” என்று கூறினார் நடராஜன்.
ஆடுகளத்தில் அதுவும் சர்வதேச மைதானத்தில் விக்கெட் எடுக்கும் போதும் சரி, காயம் ஏற்படும்போது சரி,
எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் அமையாக இருக்க எப்படி முடிகிறது என்று முரளி கார்த்தி கேட்டதற்கு,
“நான் சின்ன வயதில் இருந்து விக்கெட் எடுத்தால் கத்தும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை. மிக ஆக்ரோஷமாக கத்துவது எனக்கு வராது.
ஒரு புன்னகை செய்து விட்டு நகர்ந்து விடுவேன். ஆரம்பத்தில் இருந்தே நான் அப்படித்தான் என்று தனது இயல்பான புன்னகை மாறாமல் தமிழிலேயே தனது நிறைவு செய்தார் நடராஜன்.