முஸ்லிம் தேசிய ஒலிபரப்பை உடன் தடை செய்ய வேண்டும் ஊடகத்துறை அமைச்சில் ஞானசார தேரர் முறையீடு.
முஸ்லிம் தேசிய ஒலிபரப்பை
உடன் தடை செய்ய வேண்டும்
ஊடகத்துறை அமைச்சில் ஞானசார தேரர் முறையீடு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு பிரிவாகச் செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் தேசிய ஒலிபரப்பை உடனடியாகத் தடைசெய்யக் கோரி பொதுபலசேனா அமைப்பு, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்த பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பிலுள்ள ஊடக அமைச்சுக்கு விரைந்து இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.
அதன் பின் ஊடகங்களிடம் பேசிய அவர்,
“வஹாப்வாத, இக்குவான் இனவாதப் பிரிவு என பல்வேறு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் இலங்கையிலும் செயற்பட்டு முஸ்லிம் மக்களைத் திசைதிருப்புகின்றன என்று நாங்கள் அடிக்கடி கூறி வந்தோம்.
ஆனாலும், அதனைப் பலரும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறும்வரை நம்பவில்லை. ஆனால், இன்று அந்தச் செயற்பாடுகள் அரச ஊடகங்களைப் பயன்படுத்தி இடம்பெறுகின்றன. அதனை அரசு விரைந்து தடுக்க வேண்டும்.
அரசிலுள்ள சில அதிகாரிகள் முஸ்லிம் பிரிவுகளிலிருந்து பணம் உட்பட பல்வேறு இலஞ்சங்களைப் பெறுவதால் இதனைத் தடைசெய்ய முடியவில்லை. இனியும் அவ்வாறு இருக்கக்கூடாது. விரைந்து இந்த முஸ்லிம் ஒலிபரப்பை தடைசெய்ய வேண்டும்” – என்றார்.