வழிக்கு வந்தது மத்திய அரசு; பதாகைக்கு அனுமதி கேட்டு கோப்பாய் தவிசாளர் நிரோஷுக்குக் கடிதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையிடம் அச்செழு அம்மன் வீதிக்கான புனரமைப்பு அனுமதியையும் வீதிப்புனரமைப்புப் பதாகை வைப்பதற்கான அனுமதியையும் கோரி வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளரினால் தவிசாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரதேச சபையின் அனுமதியின்றி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரின் பிரத்தியேக ஆளணியினரால் வீதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.

அதையடுத்து சபை அனுமதி பெறப்படவில்லை எனவும், உள்ளூராட்சிக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்தை மத்திய அரசின் நிறுவனம் ஏற்றுச் செயற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு அவ்வீதி அமைப்புக்கான பதாகையை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றியிருந்தார்.

இவ்வாறு அகற்றப்பட்டமையை அடுத்து மத்திய அரசின் உயர்மட்ட அரசியல் நெருக்குவாரங்களால் தவிசாளரைக் கைதுசெய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அரசியல் பழிவாங்களில் இருந்து தப்பிப்பதற்காக தவிசாளர் நீதிமன்ற முன்பினைக்கு விண்ணப்பித்து முன்பிணை பெற்றிருந்தார்.

இந்தப் பிரச்சினை மத்திய அரசுக்கும் உள்ளூராட்சி சபைக்கும் இடையிலான அதிகாரப் பிரச்சினையாக நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளரினால் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருக்கு குறித்த வீதிக்கான விளம்பரப் பதாகையைப் போடுவதற்கு அனுமதி தருமாறு கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து தவிசாளர் நிரோஷ் கருத்துரைக்கையில்,

“விளம்பரப்பதாகை அகற்றப்பட்டவுடன் ஊரெழு அம்மன் வீதியை புனரமைப்பதற்கான தெரியப்படுத்தல் கடிதங்கள் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

நாளை (23) இடம்பெறும் மாதாந்த அமர்வில் அனுமதி பெற்று வீதி அமைத்தலுக்கான அனுமதி வழங்கப்படும். அந்த வீதி அமைவதற்கான சபை அனுமதி பெறப்பட்ட பின்னர் என்னால் விளம்பரப் பலகைக்கான அனுமதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்படும்” – என்றார்.
……

Leave A Reply

Your email address will not be published.