நல்லடக்கத்திற்கு அனுமதி கோரி ஐக்கிய மக்கள் சக்தி அமைதிப் போராட்டம்
கொரோனா தொற்று காரணமாக மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென தெரிவித்து இன்று (23) முற்பகல் பொரளை பொது மயானத்திற்கு முன்பாக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் அமைதியான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கொரோனா நோய் தொடர்பில் இடம்பெறும் மரணத்தின்போது, முஸ்லிம்கள் உள்ளிட்ட அவரவர் மத அனுஷ்டானங்களுக்கு அமைய, உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார், மனோ கணேசன், குமார வெல்கம உள்ளிட்டோர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் காலை வேளையிலேயெ அந்த இடத்திற்கு வந்த, சிங்க லே அமைப்பின் கொழும்பு மாவட்டத் தலைவர் டான் பிரியாசாத், கொரோனா மரணம் தொடர்பான சடலங்கள் அனைத்தையும் தகனம் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்ததோடு, அப்போராட்டத்திற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த இடத்தில் போராட்டம் நடாத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே அனுமதி கோரியிருந்தமையால் அவ்வார்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த டான் பிரியசாத், இந்நாட்டில் அனைத்து இனங்களும் ஒன்றாக வாழ வேண்டும். இச்சிறிய நாட்டில் இவ்வாறு அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படும் எனவும், இதனால் கொரோனவினால் மரணிக்கும் அனைத்து உடல்களும் எரிக்கப்பட வேண்டும் என தெரிவித்து அங்கிருந்து சென்றார்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும், கொரோனா தொற்று தொடர்பில் மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்ததோடு, இது தொடர்பில் அரசாங்கம் தற்போது கொண்டுள்ள முடிவை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதற்கான சாத்தியம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இன்று (23) முற்பகல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் சுகாதார அமைச்சில் மீண்டும் கூடியது. ஆயினும் அங்கு எடுக்கப்பட்ட முடிவு குறித்து உத்தியோபூர்வமான எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.