சந்திரிகா கொலை முயற்சி வழக்கு கைதிக்கு கொரணா.
சந்திரிகா கொலை முயற்சி வழக்கில் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ரகுபதி சர்மாவுக்கும் கொரோனா!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து 1999ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு 300 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ரகுபதி சர்மா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவருடன் கொழும்பு மகசின் சிறையில் தொற்றுக்குள்ளான அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.
அரசியல் கைதிகள் உட்பட பல்வேறு சிறைகளில் உள்ள 65 வரையான தமிழ் கைதிகளுக்கும் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தொற்று உறுதியான அரசியல் கைதிகள் அனைவரும் கந்தக்காடு கொரோனாத் தொற்று சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர் என்று முதலில் தகவல்கள் வெளியாகியிருந்தபோதும் தற்போதுவரை வெலிக்கடை சிறை வைத்தியசாலையிலேயே அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகசின் சிறையில் மட்டும் 44 அரசியல் கைதிகள் உள்ள நிலையில் அவா்கள் அனைவரும் அச்சம் காரணமாக பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ளப் பின்னடித்து வருகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைவருக்கும் பரிசோதைனை முன்னெடுக்கப்பட்டால் மேலும் தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் பலர் நீண்ட காலம் சிறையில் உள்ளனர். அத்துடன் இவா்களில் பலா் நீண்டகால நோய் நிலைகளுக்கு ஆட்பட்டவா்கள் என்பதால் தொற்று நோயால் இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் குடும்பத்தினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான சந்தா்ப்பத்தில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசியல் கட்சிகள், சிவில் சமூகங்கள் மற்றும் மதத் தலைவா்கள் குரல் கொடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் போராடி வரும் குரலற்றவா்களின் குரல் அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைந்தது அவா்களை உடனடியாகப் பிணையிலாவது விடுவி்த்து அவா்களின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் மதத் தலைவா்கள் மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகின்றனர்.