ரஜினியை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை : அப்பல்லோ நிர்வாகம்
ரஜினி ஆரோக்கியமாக ஓய்வில் இருக்கிறார் யாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லையென்பதால் யாரும் அவரைப் பார்க்க வர வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது
கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
ஆனாலும், சென்னை திரும்பாமல் ஐதராபாத்தில் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். எப்போது ரஜினி சென்னை திரும்புவார் என்ற தகவல் எதுவுமே வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில்
22-ம் தேதி ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அன்றிலிருந்து அவர் தனிமையில் தான் இருக்கிறார். தொடர்ந்து அவரது உடல்நலனும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அவருக்குக் கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும் அவரது ரத்த அழுத்த அளவு கடுமையாக ஏறி இறங்கி வருகிறது. மேற்கொண்டு அதற்கான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இரத்த அழுத்தம் சீராகி, அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வரை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை தரப்படும்.
ரத்த அழுத்த அளவில் மாறுபாடு மற்றும் உடல் சோர்வைத் தாண்டி அவருக்கு வேறெந்த பிரச்சினைகளும் இல்லை. அவரது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருக்கின்றன என தெரிவித்து இருந்தது.
ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தொலைபேசியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.
ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டறிந்தார். சகோதரர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் என கூறினார்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரப்பாபு நாயுடு, நடிகர் பவன் கல்யான் ஆகியோர் ரஜினிகாந்த் நலம் பெற வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே, ரஜினியின் உடல்நிலை குறித்து தற்போது மீண்டும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன. அவர் இன்றிரவு மருத்துவமனையில் இருப்பார். நாளை மேற்கொண்டு அவரது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்படும். அவர் ஆரோக்கியமாக, ஓய்வில் இருக்கிறார்.
யாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லையென்பதால் யாரும் அவரைப் பார்க்க வர வேண்டாம் என குடும்பத்தினரும், சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். அவரது மகள் அவரோடு இருக்கிறார்.
தெலங்கானா ஆளுநர் மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசினார். ரஜினி அவர்கள் வேகமாகக் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்”
இவ்வாறு அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.