நாளை மற்றுமொரு நாளே… – நாவல்  விமர்சனம்: கோதை

நாளை மற்றுமொரு நாளே… – நாவல்  விமர்சனம்: கோதை

கதாசிரியர்: ஜி நாகராஜன்

 

இலக்கியம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அளவுகோலைக் கையில் எடுத்துக் கொண்டு அலையும் இலக்கியவாதிகளைப் புறம் தள்ளி, சமூகத்தின்  பேசாப் பொருட்களை மிக இயல்பாக அதன் போக்கிலேயே எடுத்தியம்புவதே  இக்கதையின் சிறப்பு எனலாம்.   ஒரு ஒடுக்கப்பட்ட பாதாள உலகொன்றில் அனாயாசமாக  நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும், மீறல்களையும்   மிகப் பக்குவமாக,  எந்த வித திரிபுமின்றி தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் கலக்காது நாவலின்  கதாபாத்திரங்களினூடாக  உலாவ விட்டிருக்கிறார் கதாசிரியர். மீறல்கள் யாவும் மிகையின்றி, ஆபாசமின்றி இயல்பாக நடந்தேறும் ஓர் உலகம் அது. சாதாரண கதாசிரியர்கள் பேச விரும்பாத, வாழ்வின் துயர் படிந்த பக்கங்களைப் புனைவினூடாகப்  பேசிப் போகிறது ‘நாளை மற்றுமொரு நாளே…’

சமூகத்தின் கண்களுக்குத் தெரியாத பல அவலங்கள் தாம் இக்கதையின் ஒரு நாளைய சம்பவங்கள் என்பது எவரையும் தூக்கிவாரிப் போடக்கூடியதாய் இருக்கிறது.  இது எமக்கு ஒரு நாளைய சம்பவங்களாக விபரிக்கப்பட்டிருந்தாலும், நிஜத்தில் அவை ஒரே நாளில் கந்தன் என்கின்ற பிரதான பாத்திரத்தின் முழு வாழ்க்கையுமே பின்னிப்பிணைந்து சென்று விடுவதுதான் இந்நாவல்  மொழி நடையின்அலாதியான ஓர் அம்சம் எனலாம். நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாமல் உரையாடைகள் அமைவது நாவலை சிறிதே அமைதியாக்குகிறது.

 

இந்நாவலின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டப்படுவது போலவே, ” இந்தக்கதை ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்க்கை! நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக் கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல்… இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம்.  ஏனெனில், அவனுக்கும் நம்மில் பலருக்கும் போலவே நாளை மற்றுமொரு நாளே!”

 

இந்நாவலின் பெரும்பகுதி பாலியல் தொழிலார்களையும் அவர்களின் அன்றாட அவஸ்தைகள், சவால்கள், சிக்கல்களையும்  பேசிப்போகிறது.  தமது தாளாத வறுமையின் நிமித்தம் பாலியல் தொழிலை இயல்பாய் எடுத்துக் கொள்ளும் அப்பெண்களின் துயரங்களும், அவற்றையெல்லாம் கடந்து ஒரு தாயாய், ஒரு மனைவியாய்,  அயல் வீடுகளில் வசிக்கும் பெண்களாய் இவர்கள் அவதாரம் எடுப்பதும் சாதாரண மனிதர்களின் கண்களுக்குத் தெரியுமா என்பது சந்தேகமே.

இதன் பிரதான கதாபாத்திரம் கந்தன் பாலியல் தொழிலின் ஒரு இடைத்தரகர், மதுவுக்கு அடிமையான ஒரு நோயாளி. மதுவில்லா விட்டால் கைகளும் கால்களும் ஆடி விழுந்து விடக்கூடிய நிலையில் மதுவை அருந்துவதால்  மட்டுமே அந்நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருபவன்.  கந்தனின் ஒரு காலை வேளையில், அவன் பொழுது புலரும் போது அவனது உடல் இயக்கங்களும் மனதின் எண்ணங்களையும் கொண்டே அவனது கதாபாத்திரம் இந்நாவலில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அவனது குடியிருப்பில் வாழுகின்ற பலரும் அல்லது அனைவருமே வாழ்வின் அடித்தட்டு மக்கள். தம்முடைய மூச்சுகாற்றைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் படும் வேதனையும் அந்த தேவைகளின் நிமித்தம் ஒவ்வொருவருக்கிடையிலும் ஏற்படும் ஒரு வித உறவு நிலையும் எமது வாழ்வில் சொல்லப்படாத பக்கங்களே!

கந்தன், அவனது மனத்துக்குப் பிடித்த ஒருத்தியை, அவள் பாலியல் தொழில் செய்து கொண்டிருப்பினும் அவளைப் பணம் கொடுத்து வாங்கி மனைவியாகவும், அதே வேளையில் அவளைப் பாலியல் தொழிலுக்கு அனுப்புவனுமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளான்.  அவனது மனைவியான மீனாவும் அதற்கு எதிர்ப்பு எதுவும் காட்ட முடியாத பொருளாதார நிலைமையும் அவர்கள் வாழும் சமூகக் கட்டமைப்பும் இங்கு பேசப்படுகிறது. கந்தனின் நெருங்கிய நண்பனின் மனைவியான ராக்காயியும் தன் நிலை உணர்ந்து கந்தனிடம் உதவி கேட்கிறாள். அவளையும் வேறு வழியின்றி, பல மனக்குழப்பங்களுக்கிடையே  ‘மோகனா’ என்ற பெயரில் ஒரு பாலியல் தொழிலாளியாக மாற்ற உடன்படுகிறான். இங்கு அவனுக்கு எந்த விதமான குற்ற உணர்வோ அல்லது வாழ்வு குறித்த அறம் சார்ந்த, எதிர்பார்ப்புகளோ  இல்லவேயில்லை.

இது தவிர கந்தன், அந்தோணி, மீனா, முத்துச்சாமி, மகள் கீதா , மகன் சந்திரன், தன்னை ஏமாற்றிய தரகர் சோலைப் பிள்ளை போன்ற பல்வேறுபட்ட பாத்திரங்கள் உரையாடல்கள் மூலமாக, கந்தனின் நினைவுகளின் மூலமாகக் கட்டமைக்கப்பட்டு  இந்நாவலில்க் கருத்துச் செறிவான பல சிந்தனைகளைச்  சிதற விடுகின்றன. அரசியலும், வாழ்வியலும், பெண்ணியமும், வறுமையும்,  பொருளாதாரச் சீர்கேடுகளும் உரையாடல்கள் மூலமாகப் பேசப்படுகின்றன.

சமூக நீதி, நேர்மை, அதன் பால் இயங்கும் பொதுவான அறம், விழுமியங்கள்  என்பனவெல்லாம் கடந்த நிலை கந்தன் உடையது , அவனுக்கு தான் வாழுகின்ற ஒவ்வொரு நாளுமே பேரிடர் நிறைந்த காலப்பகுதி தான்.  அவனது உலகில் வரும் மாந்தர்கள் அனைவரும் திருமணம் என்ற சமூகக் கட்டுமானத்திற்குள் இல்லை.   அவனது சமூகத்தின் தேவைகளினூடாகவே அவனும் பணம் சம்பாதிக்க முடிகிறது. அதற்காக அவன் வருத்தப்படவும் இல்லை, மகிழ்ந்து போகவும் இல்லை.

இவ்வளவும் செய்யும் கந்தன் தான் இல்லாது போனால் தன் மனைவியின் நிலை குறித்துச் சிந்தித்து அவளுக்கு வேறு ஒருவனை பாதுகாப்பாக விட்டுச் செல்ல முயல்வது ஆச்சர்யமாக இருப்பினும் அவனது உலகில் அந்தச் சிந்தனை இயல்பானதாக இருக்கக்கூடும் என்று  ஆயாசமாகவே இருக்கிறது.இப்படியான இருள் நிறைந்த  இன்னொரு உலகையும் அறிந்து கொள்வது மனித நேயத்தை வளர்க்கும் என்றே தோன்றுகிறது. நிச்சயமாக, வாசித்துப் பயன் பெறக்கூடிய ஒரு குறு நாவல்.

Leave A Reply

Your email address will not be published.