சம்பிக்க வந்தாலும் சஜித்தே வேட்பாளர் ரஞ்சித் மத்தும பண்டார திட்டவட்டம்.
சம்பிக்க வந்தாலும் சஜித்தே வேட்பாளர்
ரஞ்சித் மத்தும பண்டார திட்டவட்டம்.
“43ஆம் படையணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது குறித்து எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இயக்கமும் எமது அணியுடன் இணைந்தே செயற்படும். எது எப்படி இருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரே ஜனாதிபதி வேட்பாளர். இதனை வேறு எவருக்கும் வழங்க மாட்டோம்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
43ஆம் படையணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குச் சம்பிக்க ரணவக்கவால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனநாயக அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் கட்சி பலப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய கூட்டணி அமைக்கப்படும். இந்தக் கூட்டணியில் எமது கொள்கையுடன் ஒத்துப்போகக்கூடியவர்கள் இணையலாம். அதற்கான அழைப்பை விடுக்கின்றோம்.
சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளார். 43ஆம் அரசியல் இயக்கம் பற்றி எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராகப் பல வழிகளிலும் தாக்குதல்களைத் தொடுக்க வேண்டும். அதற்காக அணிகள் இருப்பது சிறப்பு.
எது எப்படியிருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவே செயற்படுவார். அவ்வாறு தலைவர் பதவியை வகிப்பவரே ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவார். பொது வேட்பாளராக மாற்று கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படாது. அவ்வாறு வழங்கி கட்சிக்கும், ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட அநீதிகள் தொடர்பான படிப்பினை எமக்கு இருக்கின்றது” – என்றார்.