வடக்கில் இன்று 13 பேருக்குக் கொரோனாத் தொற்று!
யாழ். ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் 13 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அதன்படி வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஐவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து ஒருவர் வந்து இவர்களின் வீட்டில் தங்கிச் சென்றிருந்தார் எனவும், அவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகிய நிலையில் குறித்த குடும்பத்தாருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களுக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கேகாலை மாணவன் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ். கொக்குவிலிலும் ஒருவர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு சென்று வந்த குறித்த நபர் தனிமைப்படுத்தலில் இருந்தபோதே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.