தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போரில் மே 17, 18 தேதிகளில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்,
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்புக்கு தமிழக முதலமைச்சர் எ.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில், “இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபி இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில், “இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.