முகக்கவசம் அணியாமை,சமூக இடைவெளி பேணாமை தொடர்பில் 2025 பேர் கைது.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்தால் 2025 பேர் கைது
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இதுவரையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 2025 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவர்கள் மத்தியில் 1077 பேர் ரபிட் ஆன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 19 பேர் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு மாநகர பகுதியில் முகக்கவசம் அணியாத 2025 பேர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களுக்கு எதிராக தொற்று நோய் சட்ட விதிகளுக்கு அமைவாகவும், தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைவாகவும் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 2025 பேரில் 948 பேர் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 200 இல் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மேல் மாகாணத்துக்கு அப்பால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையில் 26 பேர் நேற்றைய தினம் முகக்கவசம் அணியாமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 2,361 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)