வவுனியா தவிர்த்து ஏனைய இடங்களில் சந்தைகள், திருமண மண்டபங்கள் திறக்க அனுமதி.
சந்தைகள், திருமண மண்டபங்கள் திங்கட்கிழமை முதல் கட்டுபாடுகளுடன் அனுமதி
வடக்கு மாகாணத்தில் வவுனியா தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுச் சந்தைகளை உரிய இடங்களில் இயங்க எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வவுனியா தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் திருமண மண்டபங்களில் 150 விருந்தினர்களுடன் வைபவங்களை நடத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
மருதனார்மடம் பொதுச் சந்தை டிசெம்பர் மாதம் 14ஆம் திகதியுடன் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் டிசெம்பர் பிற்பகுதியில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.