வடக்கில் கொரோனா தாண்டவம்! இன்று மட்டும் 50 பேருக்குத் தொற்று உறுதி!!
வடக்கு மாகாணத்தில் இன்று மாத்திரம் 50 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 26 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 23 பேருக்கும், யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மன்னாரைச் சேர்ந்த 23 பேருக்கும், வவுனியாவைச் சேர்ந்த 6 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் சங்கானையைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் புத்தளம் சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றும் சங்கானையைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் வீடு திரும்பினார்.
அவர் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மாதிரிகள் பெறப்பட்டு இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்போது அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அறிக்கை கிடைத்துள்ளது.
அத்துடன், வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வவுனியா நகர கொத்தணியுடன் தொடர்புடைய 154 பேரின் மாதிரிகள் ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களில் 20 பேருக்குத் தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” – என்றார்.