கொரோனா வைரஸ் தடுப்பூசி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து மனிதர்கள் மீது சோதனை
இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தன்னார்வலர்களுக்கு அளித்து பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், தன்னார்வலர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து அளித்து பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது.
இதே தடுப்பு மருந்தை விலங்குகளுக்குப் போட்டு பரிசோதித்தபோது, அது பயனளிப்பதாகவும், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுவதாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான பரிசோதனை பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை உலகளவில் 120 தடுப்பு மருந்துகள் ஆய்வு கட்டத்தில் உள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் அரை டஜன் மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஜூலை மாதம் தன்னார்வலர்களுக்கு போடப்பட்டு பரிசோதிக்கப்படவுள்ள இந்த தடுப்பு மருந்து உள்ளூர் ஆய்வு நிலையங்களில் பிரித்தெடுக்கப்பட்டு திறன் குறைக்கப்பட்ட வைரசில் இருந்து உருவாக்கப்பட்டது.
தற்போது பரிசோதிக்கப்படவுள்ள இந்த தடுப்பு மருந்து ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனைகளில் ”பாதுகாப்பானதாகவும் நோய் எதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுவதாகவும்” இருந்ததாக அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பாரத் பயோடெக் நிறுவனம் இரண்டு கட்டங்களாக தடுப்பு மருந்துகளை பரிசோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அல்லது கட்டுப்படுத்த உதவுகிறதா என்பதை விட, பாதுகாப்பானதா என்பதை தெரிந்துகொள்ளவே இந்த இரண்டு கட்ட பரிசோதனைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Comments are closed.