மருத்துவமனையில் இருந்தே விடுதலையான சசிகலா.. உற்சாகத்தில் தொண்டர்கள்.. அலறும் அதிமுக…!
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு ஜெயலலிதா தோழி சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதற்கான உத்தரவு மருத்துவமனையில் சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், ஜெயலலிதா தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர்,2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் அடைக்கப்பட்டனர். விடுதலையாகும் நேரத்தில் சகிகலாவிற்கு கடந்த வாரம் திடீரென மூச்சு திணறல், காய்ச்சல், சளி தொல்லை ஏற்பட்டதை தொடர்ந்து விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவரை ஐ.சி.யூ வார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 6 நாட்கள் சிகிச்சையில் அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கொரோனா தொற்றும் குறைந்து விட்டது. இதனால், சிறையில் இருந்து அவரை விடுதலை செய்வதில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதை சிறைத்துறை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையே, கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி, சசிகலாவின் நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சிறை அதிகாரிகள், முழு கவச உடை அணிந்து, சசிகலா சிகிச்சை பெறும் வார்டுக்கு, இன்று காலை சென்று, விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெறப்பட்டது. பின்னர், சிறை தலைமை கண்காணிப்பாளர் கேசவ் மூர்த்தி சசிகலாவிடம் விடுதலை பத்திரத்தை வழங்கினார். இதனையடுத்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், வழக்கறிஞர் ராஜசெந்தூர்பாண்டியன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் பெங்களூரு மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.