கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஆறு வைத்தியசாலைக்கு பகிர்ந்தளிப்பு.
இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நேற்று ஆறு பிரதான வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் இன்று முதல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அதேவேளை அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றல் மத்திய நிலையங்களில் மாத்திரம் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் மேல் மாகாணத்தில் 6 முக்கிய வைத்தியசாலைகளில் அதற்கான செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.
அதற்கிணங்க முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. அதனையடுத்து நாட்டிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மேற்படி தடுப்பூசி நபர் ஒருவருக்கு முதல் தடவையாக வழங்கப்பட்ட பின்னர் 4 வாரங்களுக்கு பின்பு மேலும் ஒரு தடுப்பூசி அவருக்கு வழங்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு மேற்படி தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதற்கான விண்ணப்பங்களை அவர்கள் சமர்ப்பிப்பதை வைத்து மேலும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகளை வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் இடம்பெறும் என்றும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நபர்கள் அது தொடர்பில் எழுத்து மூலமான தமது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்.
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் மேற்படி தடுப்பூசியை எடுத்துச்சென்று உபயோகிக்க முடியும் என்றும் அதற்கான பாதுகாப்பான உஷ்ணமான சூழல்நமது நாட்டில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க நாடளாவிய ரீதியில் 26 மத்திய நிலையங்களுக்கூடாக எதிர்காலத்தில் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை அன்பளிப்பு செய்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கிணங்க விரைவில் சீனாவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு போதியளவு தடுப்பூசிகளை வழங்கும் செயற்திட்டத்திற்காக எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை விலைக்கு கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.