பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல இது எமக்கும் இந்த நாடு சொந்தம்.
பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல இது எமக்கும் இந்த நாடு சொந்தம். சுமந்திரன் எம்.பி.தெரிவிப்பு
“சிறுபான்மை மக்கள், தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பேரணியேயன்றி, இது பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சிறுபான்மை மக்களுக்கு எதிராக அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையைக் கண்டித்தும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவே இந்தப் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த பேரணி பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் சிங்கள, பௌத்த மக்களுக்கு இருக்கும் சகல உரிமைகளும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கும் உண்டு. ஏனெனில் நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்றாலும் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வில் பேசும்போது தான் சிங்கள பௌத்தன் என்று தெரிவித்தார்.
அவர், அவ்வாறு கூறியது எங்களுக்குப் பிரச்சினை இல்லை. எனினும், இந்த நாட்டின் ஜனாதிபதி, பெரும்பான்மை மக்களுக்கும் மாத்திரம் சேவையாற்றுவேன் என்று தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எங்களுக்கும் இந்த நாடு சொந்தமானது. நாங்களும் வசிக்கின்றோம். அதேபோன்று பெரும்பான்மை மக்களும் இந்த நாட்டில் வசிப்பதற்கான உரிமை உள்ளது. எங்களின் உரிமைகளை அகற்றமுடியாது.
இதனடிப்படையில், நாங்கள் இந்தப் பேரணியை மேற்கொள்கின்றோம்” என்றார்.