தமிழகம் வரும் சசிகலாவுக்கு அ.ம.மு.க.வினர் பிரமாண்டமான வரவேற்பு.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதால் ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டார்.
பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் ஓய்வெடுக்கும் அவர் ஒரு வாரம் தனிமைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்பு பல்வேறு காரணங்களால் சசிகலா சென்னை திரும்புவது 8-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. தமிழகம் வரும் சசிகலாவுக்கு அ.ம.மு.க.வினர் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி முதல் சென்னை வரை 15 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சசிகலா வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து டி.டி.வி.தினகரன் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், கொரோனா விதிகளுக்கு உட்பட்டும் வரவேற்பு நிகழ்ச்சிகள் அமையவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள அ.ம.மு.க.வினர் சசிகலாவை வரவேற்க வாகனங்களில் திரண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட வாரியாக அ.ம.மு.க.வினர் வரவேண்டிய வரவேற்பு இடங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக அ.ம.மு.க.வினர் வரவேண்டிய இடங்களை கட்சி மேலிடம் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளது. அதன்படி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை அடங்கிய மண்டல நிர்வாகிகள் கிருஷ்ணகிரிக்கு திரண்டு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் தென்மாவட்ட நிர்வாகிகள் வேலூருக்கு திரண்டு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
8-ந்தேதி காலை 7.30 அளவில் சசிகலா பெங்களூருவில் இருந்து புறப்படுகிறார். அத்திப்பள்ளி வரை கர்நாடக மாநில அ.ம.மு.க. சார்பில் டிஜிட்டல் பேனர்கள், வரவேற்பு வளைவுகள் அமைக்கப்படுகின்றன.
மேலும் ஓசூர் முதல் சென்னை வரை சசிகலா செல்லும் பாதையில் பல்வேறு இடங்களில் வரவேற்பு பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டப்படுகின்றன. கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று சசிகலாவை வரவேற்பதோடு சசிகலா காரை பின்தொடர்ந்து சென்னை வரை செல்ல திட்டமிட்டிருப்பதாக அ.ம.மு.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.