முதலாவது டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. கப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 74 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து இருந்தது. தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 33 ரன்னுடனும், ஆர்.அஸ்வின் 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று நடந்த 4-வது நாள் ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின் இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். தனது 2-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் வாஷிங்டன் சுந்தர், நேற்றைய ஆட்டத்தில் 2-வது அரைசதத்தை அடித்து அசத்தினார்.

இருப்பினும் அணியின் ஸ்கோர் 305 ரன்னை எட்டிய போது பாலோ-ஆனை (379 ரன்கள்) தவிர்க்கும் வரை நிலைத்து நிற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த இணை பிரிந்தது. அடுத்து வந்தவர்கள் நிலைத்து நிற்காததால், 95.5 ஓவர்களில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

பின்னர் 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிரடியாக அடித்து ஆடியது. ஆனால் அஸ்வின், ஷபாஸ் நதீம் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்து அணியின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டதுடன், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் விரைவில் வீழ்த்தினார்கள்.

இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 46.3 ஓவர்களில் 178 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்தது.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் 381 ரன்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 192 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 72 ரன்கள், சுப்மன் கில 50 ரன்கள் எடுத்தனர். இன்றைய வெற்றியின் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் போட்டிகளுக்கான புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.