நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மார்ச் இல் திறப்பு.
கொழும்பில் 492 பாடசாலைகளில் 412 திங்கட்கிழமை திறப்பு
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மார்ச் 15 இல் திறப்பு.பரிந்துரை சுகாதார பிரிவின் அனுமதிக்கு அனுப்பி வைப்பு
கொழும்பிலுள்ள 492 பாடசாலைகளில் 412 பாடசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை பாடசாலைகளை திறப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர்ந்த, ஏனைய பாடசாலைகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பாடசாலைகள் திறப்பது தொடர்பான மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் பரிந்துரைகளைப் பெற கல்வி அமைச்சினால் அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மேல் மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்குட்பட்ட 1,576 பாடசாலைகளில் 907 பாடசாலைகள் கடந்த ஜனவரி 25ஆம் திகதி முதல் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.
அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை பெப்ரவரி 15இற்கு முன் திறப்பது தொடர்பில், கடந்த 5 நாட்களாக பிரதேச இணைப்பு குழு கூடி கலந்தாலோசித்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும், அது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த அனுமதி கிடைத்ததும் அதனை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மார்ச் 15 முதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைளையும் அனைத்து தரங்களுக்கும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் மொத்தமாக 492 பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றில் 412 பாடசாலைகளை பெப்ரவரி 15இல் திறப்பதில் எவ்வித சிக்கல்களும் இல்லையென, மாவட்ட அபிவிருத்திக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
கொலன்னாவை, ஹோமாகம, கெஸ்பேவ, தெஹிவளை, மொரட்டுவை, சீதாவக்கை ஆகிய ஏழு பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அனைத்து பாடசாலைகளும் பெப்ரவரி 15 இல் மீண்டும் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, திறக்கப்படும் 412 பாடசாலைகளும் பிரதேச செயலகங்களும்
கொழும்பு பிரதேச செயலகத்திலுள்ள 76 இல் 73
திம்பிரகஸ்யாய 54
ஸ்ரீ ஜயவர்தனபுர 31 இல் 29
கொலன்னாவை 19
கடுவல 49 (அரச பாடசாலை 35) இல் 17
ஹோமாகம 39
பாதுக்கை 26 இல் 11
கெஸ்பேவ 55
மஹரகம் 32 இல் 07
தெஹிவளை 15
இரத்மலானை 27 இல் 24
மொரட்டுவை 28
சீதாவக்கை 41
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய 80 பாடசாலைகளை பெப்ரவரி 15 இல் திறக்காதிருக்க பரிந்துரை செய்யப்பட்டள்ளதாகவும், அப்பாடசாலைகளை மார்ச் 15 ஆம் திகதி புதிய தவணை ஆரம்பிக்கப்படும் போது திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளைமார்ச் 01 முதல் 11 வரை க.பொ.த. சாதாரண பரீட்சைகளை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, அதன் பின்னர் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் அனைத்து தரங்களிலுமுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மார்ச் 15ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சுகாதார பிரிவின் அனுமதிக்கு உட்பட்டு மீண்டும் திறக்கப்படும். என, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.