மின்சார வேலியில் சிக்குண்டு 8 வயதுச் சிறுவன் ஒருவன் பலி.
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 8 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் சந்தனவெட்டை தி/மூ ஐங்கரன் வித்தியாலயத்தில் 2 ஆம் தரத்தில் கல்வி பயிலும் இந்திரன் ரஜீதன் என சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சிறுவன் மலம் கழிப்பதற்காகச் சென்ற போது யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவனின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மின்சார வேலியை யானை பாதுகாப்புக்கு போட்டுவிட்டு அணைக்காமல் சென்று சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த இரண்டு சந்தேகநபர்களை சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.