சசிகலா – திமுக ரகசிய டீல்?
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சசிகலா வெளியே வந்த நாளில் அமமுகவினரை காட்டிலும் திமுக மேலிடம் மிகுந்த உற்சாகத்தில் இருந்ததை காண முடிந்தது.
சசிகலா பெங்களூரில் இருந்து புறப்பட்ட போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் இருந்தார். அங்கு அவர் இரண்டு திருமணங்களை நடத்தி வைக்க வேண்டியிருந்தது. முதல் திருமணத்தை அவர் காலை பத்துமணி அளவில் நடத்தி வைத்தார். அப்போது தான் சசிகலா சரியாக தமிழக எல்லைக்குள் வந்திருந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. இது பற்றிய தகவலை ஸ்டாலினிடம் அவரது உதவியாளர்கள் எடுத்துக்கூறினர். சசிகலா அதிமுக கொடி கட்டிய காரிலேயே வந்துகொண்டிருப்பதை ஸ்டாலினிடம் அவர்கள் சொல்லியுள்ளனர்.
திருமணத்தை நடத்தி வைத்த பிறகு மேடையில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது வழக்கமாக சீர்திருத்த திருமணங்கள் குறித்து பேசும் அதே டெம்ப்ளேட்டை பேசிவிட்டு நடப்பு அரசியல் களத்திற்கு தாவினார். அப்போது பெங்களூரில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் தான் தான் என கூறிக் கொண்டு ஒருவர் புறப்பட்டுவிட்டார். இனி நடக்கப்போவது தானாக நடக்கும். என்று மிகுந்த உற்சாகத்துடனும், சிரித்த முகத்துடனும் ஸ்டாலின் கூறினார். அதாவது அதிமுக ஆட்சிக்கு சசிகலாவால் ஆபத்து என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தான் என்பது போலவும் ஸ்டாலின் அங்கீகாரம் வழங்கியது போல் அவரது பேச்சு இருந்தது.
இதே போல் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி மதுரையில் இருந்தார். அவர் காலையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்று பிரச்சாரத்தை துவக்கினார். வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த கனிமொழி, அங்குள்ள ஒரு டீ கடையில் டீ பருகவும் தயங்கவில்லை. பிறகு அந்த பகுதியில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாலப்பணிகளையும் கனிமொழி ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை கனிமொழி சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். சசிகலாவுக்கு துரோகம் செய்தவர்கள் தான் தற்போது ஆட்சி செய்து வருகின்றனர் என்று பதில் அளித்தார்.
இதே போல் கடந்த சில நாட்களாகவே செல்லும் இடங்களில் எல்லாம் சசிகலாவை உயர்த்திப்பிடித்து பேசி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். சசிகலா வருகைக்கு பயந்தே ஜெயலலிதா நினைவிடத்தை அதிமுக அரசு மூடியுள்ளதாக அவர் கூறி வருகிறார். அதோடு சசிகலா மறுபடியும் ஜெயலலிதாநினைவிடம் சென்று சபதம் எடுத்துவிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி அச்சப்படுகிறார் என்று உதயநிதி கூறி வருகிறார். இதன் மூலம் கடந்த சில நாட்களாக திமுக மேடையில் சசிகலாவிற்கு இலவசமா விளம்பரம் கிடைத்து வருகிறது. மேலும் சசிகலா குறித்து உதயநிதி பேசும் போதெல்லாம் சொல்லி வைத்தாற்போல் திமுக நிர்வாகிகள் கைதட்டுவதையும் காண முடிகிறது.
இவற்றுக்கு எல்லாம் உச்சமாக சன் நியுஸ் தொலைக்காட்சியின் சசிகலா வருகை கவரேஜை பற்றி கூறலாம். சசிகலா வருகையை புல் லைவ் கவரேஜ் செய்ய ஜெயா டிவி ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக நேரலை கருவிகள் மூலம் பெங்களூர் முதல் சென்னை தியாகராய நகர் வீடு வரை ஏகப்பட்ட ஏற்பாடுகளை ஜெயா டிவி செய்திருந்தது. இதில் வேடிக்கை என்ன என்றால் ஜெயா டிவி செய்த ஏற்பாடுகளை அப்படியே சன்டிவி வாங்கி சன் நியுசில் சசிகலா வருகையை முழுவதுமாக நேரலை செய்து கொண்டிருந்தது. கட்சி சார்பற்ற சேனல்களான புதிய தலைமுறை, தந்தை, நியுஸ் 18, பாலிமர் போன்றவை எல்லாம் கூட சசிகலா வருகைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஆனால் சன் நியுஸ் சசிகலா ஏதோ ஒரு மிகப்பெரிய தியாகம் செய்துவிட்டு வெற்றி வாகை சூடி தமிழகம் திரும்புவது போல் பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தது. மேலும் ஒரு இடத்தில் கூட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து தமிழகம் வருகிறார் என்பதை சொல்லாமல் தவிர்த்து வந்தது. இந்த அளவிற்கு சன் நியுஸ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு கூட முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. ஆனால் சசிகலாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று திமுகவினரே யோசிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் சன் நியுசின் செய்தி ஆசிரியராக இருக்க கூடிய குணசேகரன், நேற்றைய தினம் காலையிலேயே, சசிகலா ஏற்கனவே அளித்த ஒரு பேட்டியில் நிச்சயம் நான் முதலமைச்சராக பதவி ஏற்பேன் என்று கூறியிருந்த ஸ்க்ரீன் ஷாட்டை ஷேர் செய்திருந்தார்.
திமுக ஆதரவு சேனலான சன் நியுஸ் இப்படி சசிகலா வருகைக்கு அளவிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தது, சசிகலா சென்னை திரும்பியது குறித்து புதுக்கோட்டையில் ஸ்டாலின் பேசியது, மதுரையில் கனிமொழி சசிகலாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது, ஒர வார காலமாகவே சசிகலா மீத அனுதாபம் வரும் வகையில் உதயநிதி பேசுவது போன்றவற்றை எல்லாம் பார்க்கும் போது, திமுக – சசிகலா இடையே ரகசிய டீல் உருவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது அல்லவா?