யாழ். தீவுகளின் அபிவிருத்திப் பணியை சீனாவிடமிருந்து பிடுங்கியது இந்தியா!
யாழ். தீவுகளின் அபிவிருத்திப் பணியை
சீனாவிடமிருந்து பிடுங்கியது இந்தியா!
சீனாவின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் மேற்கொள்ளப்படவிருந்த அபிவிருத்திப் பணிகள் தற்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேற்படி மூன்று தீவுகளிலும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திட்டங்களே இவ்வாறு இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சக்தி அமைச்சருடன் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அண்மையில் பேச்சு நடத்தியுள்ளார்.
மேலும், இதற்கான முழுச் செலவான 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாகவும் இந்தியத் தூதுவர் அறிவித்துள்ளார்.
அந்தவகையில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இந்தியாவின் நன்கொடையுடன் யாழ்ப்பாணத்தில் இந்தக் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும,
“யாழ்ப்பாணம் மக்களுக்குப் போதுமான வகையில் குறைவின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்பதே மின்சக்தி அமைச்சர் என்ற வகையில் எனது முழுமையான நோக்கமாக இருக்கின்றது.
அந்த வகையிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த யாழ்ப்பாணத்தின் அனலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில்,
காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலமான மின்சக்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காரணம் தற்போது இந்தத் தீவுகளுக்கு டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இது மிகவும் செலவு கூடியதாகும்.
அதனால்தான் இந்தக் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். எனினும், இந்தியா இது தொடர்பில் அக்கறை செலுத்தி இருக்கின்றது.
என்னை அண்மையில் சந்தித்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முழுமையான நிதி செலவான 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்தார்.
இந்தப் பிராந்தியம் குறித்து அக்கறை செலுத்துகின்ற ஒரு மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. அதுமட்டுமன்றி இந்தியாவானது இலங்கையின் மூத்த அண்ணனாகும்.
எனவே, இந்தியா கூறுகின்ற இந்த யோசனையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இந்தியாவின் இந்த ஆலோசனையை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றோம்” – என்றார்.